
தூத்துக்குடி மாவட்டம் கவர்நகிரியில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கனார் மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு 252வது பிறந்தநாளையொட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘அமித்ஷா அவர்கள் ஒரு மேடையில் பேசும்போது மக்கள் தொகை அடிப்படையில் இந்திய மக்கள் அதிகம் பேசும் மொழி இந்தி மொழி எனக்கூறினார். அதிகமாகப் பேசக்கூடிய மொழி தமிழ் மொழியாக ஆக்க வேண்டும் எனக் கூறினார். தமிழ் மொழி இணைப்பு மொழியாக இருந்தால் அனைவருமே சந்தோஷப் படுவோம். தமிழ்மொழி இணைப்பு மொழியாக வரவேண்டும் என்றால் இந்தியாவில் அதிக அளவில் தமிழ் பேசப்பட வேண்டும்.
ஏ.ஆர் ரகுமான் அவர்கள் சொன்னதில் எந்த வித தவறும் இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் 10 தமிழ் பயிற்று மொழி பள்ளிக்கூடங்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும். அனைத்து மாநில முதல்வருக்கும் கடிதம் எழுத வேண்டும். அப்போதுதான் தமிழ் மொழி அதிகம் பேசப்படக்கூடிய மொழியாக மாறும். அப்போது இணைப்பு மொழியாக வாய்ப்பு உள்ளது’ என்று கூறினார். அப்போது நெல்லை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நயினார் நாகேந்திரன் முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.