தேர்தல் ஆணையத்துக்கு பாராட்டு... திமுக வழக்கை முடித்து வைத்த உயர் நீதிமன்றம்!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 30, 2021, 2:04 PM IST
Highlights

சுமார் 11 ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக அவற்றை அரசியல் கட்சிகளுக்கு வழங்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும், வெப் காஸ்டிங் மூலம் நேரலை செய்ய உத்தரவிட வேண்டும் என திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பதட்டமான வாக்குச் சாவடிகளை அடையாளம் காண்பது தொடர்பாக அரசியல் கட்சிகளுடன்  கூட்டம் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.  அந்த கூட்டத்தில் நடத்தப்பட்ட விவாதங்களின் அடிப்படையில் பதட்டமான வாக்குச் சாவடிகள் என அடையாளம் காணப்பட்ட வாக்குச்சாவடிகளின் பட்டியலை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தனர்.

மேலும், தமிழக சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானது? தேர்தலுக்கு முன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கண்காணிக்கப்படுமா?  தேர்தலுக்கு பின் வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறைகளில் ஜாமர் கருவிகள் பொருத்தப்படுமா? என்பது குறித்து மார்ச் 29ம் தேதி பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், 15 ஆண்டுகளுக்கு மேல் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது எனவும், 2017 - 19ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், பதட்டமான வாக்குச்சாவடிகளை கண்டறிய கடந்த 26ம் தேதி, அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டதாகவும், அதன்படி, சுமார் 11 ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக அவற்றை அரசியல் கட்சிகளுக்கு வழங்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

பதட்டமான வாக்குச் சாவடிகள் என அடையாளம் காணப்பட்ட 11 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும், நூறு சதவீதம் வெப் காஸ்டிங் செய்யப்படுவதாகவும், மாநிலம் முழுவதும், 44 ஆயிரம் சாவடிகளில் வெப் காஸ்டிங் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முழுமையாக சோதித்த பிறகே வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் எனவும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் ஜாமர் கருவிகள் பொருத்த அவசியமில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.தேர்தல் ஆணையத்தின் இந்த விளக்கத்தை பதிவு செய்த நீதிபதிகள், அடுத்த வாரம் நடக்கும் தேர்தல் அமைதியாக, எந்த அசம்பாவிதமும் இல்லாமல் நடக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

தேர்தல் நாளில் கொரோனா தாக்கல் அதிகமாகாமல் இருப்பதை உறுதி செய்ய தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், தேர்தலுக்கு முன்பும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறைகளுக்கும் 24 மணி நேர பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். கொரோனா நேரத்தில், நிதி நெருக்கடியில் சிறப்பான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ள தேர்தல் ஆணையத்துக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், ஒப்புகைச் சீட்டு எண்ணும் விஷயத்தில் தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கலாம் எனவும், தேர்தல் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் உள் நோக்கத்துடன் ஒப்புகைச் சீட்டை எண்ண கோரினால் அதை தேர்தல் அதிகாரிகள் ஏற்க மறுக்கலாம் எனவும் உத்தரவிட்டு திமுகவின் வழக்கை முடித்து வைத்தனர்.

click me!