தைரியமாக கொரோனா நோயாளிகளிடம் நேராக சென்ற கலெக்டர்..! ராயல் சல்யூட் சார்

By karthikeyan VFirst Published Apr 4, 2020, 10:12 PM IST
Highlights

கொரோனா நோயாளிகளை அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த சிறப்பு வார்டுகளுக்கே சென்று நேரில் பார்வையிட்ட திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருளுக்கு மக்கள் தங்களது பாராட்டு மழையை பொழிந்துவருகின்றனர்.
 

தமிழ்நாட்டில் கொரோனா கோர முகத்தை காட்டிவருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை புது உச்சத்தை தொட்டுவருகிறது. கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் 485ஐ எட்டிவிட்டது. 

கொரோனாவால் தமிழ்நாட்டில் 3 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருந்தாலும், கொரோனா தடுப்பு பணிகளை சுகாதாரத்துறை தீவிரமாக மேற்கொண்டுவருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் பணி மற்றும் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 

மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் இரவு பகலாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து, கொரோனா தடுத்துவிரட்ட முழு மூச்சில் வேலை பார்த்து வருகின்றனர். 

முதல்வர் பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோரும் கொரோனாவை கண்டெல்லாம் அஞ்சாமல் தைரியமாக களத்தில் இறங்கி பணியாற்றி கொண்டிருக்கின்றனர். உயரதிகாரிகளை ஒயிட் காலர் ஜாப் என்றெல்லாம் சொல்லவே முடியாது. ஏனெனில் தற்போதைய சூழலில் உயரதிகாரிகள், ஆட்சியாளர்கள் அனைவருமே களத்தில் இறங்கி பணியாற்றி கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுவரும் சிறப்பு வார்டுகளுக்கு நேராக சென்று பார்வையிட்டுள்ளார். மிகவும் கொடிய வைரஸான கொரோனாவை கண்டு அனைவரும் பீதியில் இருக்கும் நிலையில், தனக்கு தொற்று வந்துவிடுமோ என்ற பயமெல்லாம் இல்லாமல் தைரியமாக கொரோனா சிறப்பு வார்டுகளுக்கே சென்று பார்வையிட்டுள்ளார் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள். 

அவர் கொரோனா வார்டை பார்வையிடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அதை பார்க்கும் சமூக வலைதளவாசிகளும் மக்களும் கலெக்டர் சிவன் அருளை வெகுவாக புகழ்ந்துவருகின்றனர்.
 

click me!