மீண்டும் புலிகள்..?? பாகிஸ்தான் TO இலங்கைக்கு ஆயுத கடத்தல்.. சென்னையில் தேசிய புலனாய்வு முகமை அதிரடி வேட்டை.

By Ezhilarasan BabuFirst Published Oct 7, 2021, 9:58 AM IST
Highlights

அப்போது அவரது இல்லத்தில் விடுதலைப்புலிகள் இயக்கம் தொடர்பான பல்வேறு ஆவணங்கள், புத்தகங்கள் மற்றும் சிம் கார்டுகள் லேப்டாப், டேப்லட் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்கள் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. 

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வந்ததாகவும், ஹெராயின் மற்றும் ஆயுதக் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர் என கூறி சென்னையில் வசித்து வந்த இலங்கைத் தமிழரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கடந்த மாதம் 18ஆம் தேதி கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் விழிஞ்ஞம் கடற்கரை பகுதியில் கடலோர பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற தோணியை பரிசோதனை செய்ததில் அதில் கடத்திவரப்பட்ட 300 கிலோ ஹெராயின், ஐந்து ஏ.கே47 ரக துப்பாக்கிகள் மற்றும் அதற்குரிய 1000 தோட்டாக்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்யப்பட்டது. 

இதையும் படியுங்கள்: ஸ்கெட்ச் போட்டு காய் நகர்த்திய முதல்வர் ஸ்டாலின்.. வீட்டுக்கே ஓடிவந்து பார்த்த டாடா நிறுவன தலைவர். 

அந்தத் தோணியில் இருந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த தொடர்பாக விழிஞ்ஞம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், ஹெராயின் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதால், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய சுரேஷ் மற்றும் சௌந்தர்ராஜன் ஆகிய இருவரும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக  சென்னை, திருவள்ளூர், கேரள மாநிலம் எர்ணாகுளம் உள்ளிட்ட 7 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது சென்னை வளசரவாக்கம் முரளி கிருஷ்ணா நகரில் வசித்துவந்த சத்குணம் என்ற சபேசன் (46) என்ற இலங்கை தமிழர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இதையும் படியுங்கள்: ஜவ்வரிசியில் கலப்படம்.. ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு.

அப்போது அவரது இல்லத்தில் விடுதலைப்புலிகள் இயக்கம் தொடர்பான பல்வேறு ஆவணங்கள், புத்தகங்கள் மற்றும் சிம் கார்டுகள் லேப்டாப், டேப்லட் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்கள் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அதில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு ஆயுதங்கள் மற்றும் போதை பொருட்கள் கடத்தலுக்கு உடந்தையாக  இருந்ததாகவும், அதேபோல் விடுதலைப்புலிகளின் மறுமலர்ச்சிக்காக பணியாற்றி வந்ததாகவும் கூறி சத்குணம் என்கிற சபேசனை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
 

click me!