அதெப்படி சுதந்திரதின உரையில் வீரன் அழகுமுத்துக்கோன் பெயர் விடுபடலாம்.? மு.க.ஸ்டாலினுக்கு ஓபிஎஸ்-இபிஎஸ் கேள்வி!

Published : Aug 18, 2021, 09:46 PM ISTUpdated : Aug 18, 2021, 09:48 PM IST
அதெப்படி சுதந்திரதின உரையில் வீரன் அழகுமுத்துக்கோன் பெயர் விடுபடலாம்.? மு.க.ஸ்டாலினுக்கு ஓபிஎஸ்-இபிஎஸ் கேள்வி!

சுருக்கம்

முதல்வர் மு.க.ஸ்டாலினின் சுதந்திர தின உரையில் தியாகி அழகுமுத்துக்கோன் பெயர் தவிர்க்கப்பட்டது குறித்து அதிருப்தியை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளிப்படுத்தியுள்ளனர்.  

இதுதொடர்பாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நமது தேசம் சுதந்திரம் பெறுவதற்கு பெரும் பங்காற்றியவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள். அவர்களின் வீரமும், தீரமும், துணிவும், கொடையும் அளப்பரியது. அவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் அனைவருக்கும் மணிமண்டபங்களும், சிலைகளும் அமைத்து நினைவுகூறும் வகையில் அரசு விழாவும் எடுக்கப்படுகிறது. அதில், பெரும்பான்மையான பங்கு அதிமுகவுக்கும், அதன் தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கும் உண்டு.
எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தின விழாவில் கோட்டைக் கொத்தளத்தில் மூவர்ணக் கொடி ஏற்றி சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூறும் விதமாகவும், அவர்கள் தம் தியாகத்தைப் போற்றும் விதமாகவும் அனைவரின் திருப்பெயரையும் சுதந்திர தின உரையில் நினைவுகூர்ந்து பேசுவது வழக்கம். ஆனால், நடந்து முடிந்த சுதந்திர தின விழாவில் முதல்வர், அவர்தம் சுதந்திர தின உரையில் வீரன் அழகுமுத்துக்கோன் பெயரை தவிர்த்து, மற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களை மட்டும் நினைவு கூர்ந்து பேசியது மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
1991-1996 ஜெயலலிதா ஆட்சியில் மாவீரர் அழகுமுத்துக்கோனுக்கு சென்னை, எழும்பூரில் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட்டதோடு, தூத்துக்குடி மாவட்டத்தில் வீரன் அழகுமுத்துக்கோனுக்கு 38.50 லட்சம் ரூபாய் செலவில் மணிமண்டபம் அமைக்கப்பட்டு 8.12.2004 அன்று திறந்துவைக்கப்பட்டது. மேலும், வீரன் அழகுமுத்துக்கோன் பெயரில் அரசு போக்குவரத்துக் கழகமும் உருவாக்கப்பட்டு, அவருக்கு மேலும் சிறப்பு சேர்க்கப்பட்டது. அதே போல், அவர்தம் பிறந்த நாளான ஜூலை 11-ம் நாளன்று ஒவ்வோர் ஆண்டும் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து அரசு விழாவாகக் கொண்டாடுவதற்கு ஜெயலலிதாவின் அரசால் அறிவிக்கப்பட்டது.


இத்தகைய போற்றுதலுக்குரியவரின் பெயரை இந்த சுதந்திர தினப் பொன் விழா ஆண்டில் நினைவு கூறாமல் சுதந்திர தின உரை நிகழ்த்தியது வருத்தம் அளிக்கிறது. சாதி, மத பேதமற்ற அரசைத் தான் பெரும்பான்மையான மக்கள் விரும்புவார்கள். அதன் அடிப்படையில் இது போன்ற தவறுகள் இனி வரும் காலங்களில் நிகழாவண்ணம், அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களையும், எம்ஜிஆர் வழியிலும், ஜெயலலிதா வழியிலும் நினைவு கூர்ந்து, ஒரே ரீதியான மரியாதையையும், கவுரவத்தையும் வழங்கி அவர்கள் தம் புகழைப் பேண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்” என்று அறிக்கையில் ஓபிஎஸ் - இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!