எடப்பாடி பழனிச்சாமி கார் மீது செருப்பு வீசிய சம்பவம்.. அமமுக தொண்டர்கள் 50 பேர் மீது வழக்கு. ஆடிப்போன டிடிவி.

By Ezhilarasan BabuFirst Published Dec 6, 2021, 11:47 AM IST
Highlights

அப்போது அதிமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் தூண்டுதலின் பேரில் அக்காட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் சில சமூக விரோதிகள் சட்டவிரோதமாக காமராஜர் சாலையில் எம்ஜிஆர் நினைவிடத்திற்கு முன்பாக நூற்றுக்கணக்கில் திரண்டு எடப்பாடி பழனிச்சாமியின் காரை முற்றுகையிட்டனர் 

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் கார் மீது செருப்பு வீசிய வழக்கில் அமமுகவைச் சேர்ந்த 50 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு  செய்துள்ளனர். இது டிடிவி தரப்பிற்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் மரியாதை செலுத்தினர். அதிமுக- அமமுக தொண்ரகள் திரண்டு வந்து மரியாதை செலுத்தினர். அப்போது ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவரும் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மரியாதை செலுத்த வந்தனர். அப்போது எடப்பாடி பழனிச்சாமி ஜெயலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு திரும்பியபோது அங்கு திரண்டு இருந்த கூட்டத்தினர் அவரது காரை மறித்து கோஷம் எழுப்பினர். 

இதனால் அங்கிருந்த அதிமுக- அமமுக தொண்டர்கள்  இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனிடைய சில மர்ம நபர்கள் எடப்பாடி பழனிச்சாமி கார் மீது செருப்பு வீசினர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசாரின் பாதுகாப்புடன் எடப்பாடி பழனிச்சாமியின் கார் பத்திரமாக வெளியேறியது. எடப்பாடி பழனிச்சாமியின் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் வைரலானது, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அது மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனை அடுத்து சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் பகுதியை சேர்ந்த மாறன் என்பவர் அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் வருகை தந்தனர். அப்போது இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி காமராஜர் சாலைக்கு வந்தார். அதிமுக அம்மா பேரவை துணைச் செயலராக இருந்து வரும் தானும் அவருடன் நினைவிடத்திற்கு வந்து அம்மா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பினோம்.

அப்போது அதிமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் தூண்டுதலின் பேரில் அக்காட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் சில சமூக விரோதிகள் சட்டவிரோதமாக காமராஜர் சாலையில் எம்ஜிஆர் நினைவிடத்திற்கு முன்பாக நூற்றுக்கணக்கில் திரண்டு எடப்பாடி பழனிச்சாமியின் காரை முற்றுகையிட்டனர் மிகவும் மோசமான வார்த்தைகளால் அப்போது அவர்கள் கழக நிர்வாகிகளின் பெயரைச் சொல்லி கூச்சலிட்டனர். அப்போது ஆவேசத்துடன் கையில் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களுடன் தங்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர். கற்களை வீசினர், அதில் நான் பலத்த காயம் அடைந்தேன், செருப்புகளையும் கட்டைகளையும் அவர்கள் எடப்பாடி பழனிச்சாமியின் கார் மீது வீசினர். அப்போது அது எங்கள் மீது விழுந்தது. அதனால் எனது இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. என்னுடன் வந்த செங்கல்பட்டு மேற்கு எம்ஜிஆர் மன்ற செயலாளர் ராஜப்பா அவர்களும் காயமடைந்துள்ளார். சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் திட்டமிட்டு சதி திட்டம் தீட்டி பயங்கர ஆயுதங்களுடன் திரண்ட ஆபாச வார்த்தைகளைப் பேசிய டிடிவி தினகரன் துண்டுகளுடன் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் அண்ணா சதுக்கம் போலீசார் அமமுக கட்சியை சேர்ந்த 50 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது டிடிவி தினகரன் தரப்பிற்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இது குறித்து கருத்து தெரிவித்திருந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஜனநாயக ரீதியில் எதிரிகளை எதிர் கொள்வோமே தவிர ஒருபோதும் வன்முறையை கையில் எடுக்க மாட்டோம். வன்முறை மீது எங்களுக்கு எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை. வன்முறையில் ஈடுபடுவது எடப்பாடி பழனிச்சாமிக்கு வேண்டுமானால் கைவந்த கலையாக இருக்கலாம், எங்களுக்கு அல்ல என அவர் கூறியிருந்தார். இந்நிலையில் அமமுக தொண்டர்கள் 50 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

click me!