டெங்கு கொசுவுக்கு கூட தீங்கு நினைக்காத எடப்பாடிக்கு அச்சுறுத்தலா? நக்கலடிக்கும் ராமதாஸ்!

First Published Oct 16, 2017, 1:28 PM IST
Highlights
Threat to security for Palanisamy


முதலமைச்சர் பழனிசாமி எந்த தியாகத்தையும் செய்துவிடவில்லை... ஊழல் மட்டுமே செய்து வருகிறார். எந்த அச்சுறுத்தலும் இல்லை. இசட் பிளஸ் காவல் கோரப்பட்டால் அதைனை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு தமிழக காவல்துறையின் உளவுப்பிரிவு பரிந்துரைக்க தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் காவல் தேவை என்பது நல்ல நகைச்சுவை என்பதைத் தவிர வேறெதுவுமில்லை என்று கூறியுள்ளார்.

இசட் பிளஸ் பாதுகாப்பு என்பது சசிகலாவின் ஆதரவுடன் விலை கொடுத்து வாங்குவதற்கு முதலமைச்சர் பதவி அல்ல என்றும், பிரதமர், முன்னாள் பிரதமர்கள், ராஜீவ் காந்தி குடும்பத்தினருக்கு மட்டும் வழங்கப்பட்டு வரும் சிறப்பு பாதுகாப்பு படைக்கு அடுத்தப்படியாக தேசிய பாதுகாப்பு படையினரைக் கொண்டு வழங்கப்படும் இரண்டாம் நிலை பாதுகாப்பு என்றார்.

இன்றைய நிலையில் 17 பேருக்கு மட்டுமே இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இவர்களின் உயிருக்கான அச்சுறுத்தல் அளவிட முடியாதது என்றாலும் கூட இவர்களில் பலருக்கு வழங்கப்படும் இசட் பிளஸ் பாதுகாப்பை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு பல தரப்பில் இருந்து பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.

இசட் பிளஸ் பாதுகாப்பு பெற்று வரும் தலைவர்களுக்கு உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலுடன் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலை ஒப்பிடவே முடியாது. இன்னும் கேட்டால் எடப்பாடி பழனிசாமிக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை. 

ஆந்திராவில் நக்சலைட்டுகளை ஒடுக்க சந்திரபாபு நாயுடு நடவடிக்கைகளை எடுத்ததால் குண்டு வெடிப்பு நிகழ்த்தி படுகொலை செய்ய முயற்சி நடந்தது. அந்த தாக்குதலில் சந்திரபாபு நாயுடு உயிர் தப்பினார். இதனால் அவருக்கு உயர்நிலை இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

விடுதலைப் புலிகளால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்று கூறி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இசட் பிளஸ் பாதுகாப்பு பெற்றால். ஆனால், டெங்கு கொசுக்களைக் கூட ஒழிக்காத பழனிசாமிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறினால் குழந்தைகள் கூட சிரிக்கும் என்று ராமதாஸ் கிண்டலடித்துள்ளார்.

சசிகலா, தினகரன் ஆதரவால் தமிழக முதலமைச்சர் பதவியை ஏலத்தில் எடுத்து அமர்ந்துள்ள எடப்பாடி பழனிசாமி, தம்மை ஓர் ஆண் ஜெயலலிதாவாகவே நினைத்துக் கொண்டு அவரைப்போல் செயல்பட்டு வருகிறார். இசட் பிளஸ் பாதுகாப்பு என்பது எடப்பாடி பழனிசாமியின் ஆபத்துக்குத் தேவையானது அல்ல... அது அடையாளத்துக்கு தேவையானதாகும் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.

எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லாத முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த வகையான சிறப்பு பாதுகாப்பும் தேவையில்லை என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி எந்த தியாகத்தையும் செய்துவிடவில்லை.... ஊழல் மட்டும்தான் செய்து வருகிறார். அவருக்கு கறுப்பு பூனைப்படை பாதுகாப்பு வழங்குவது அப்படைக்கு செய்யும் அவமரியாதை ஆகும். எனவே பழனிசாமிக்கு இசட் பிளஸ் காவல் கோரப்பட்டால் அதை
மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

click me!