
தமிழகத்தில் டெங்கு பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதி வேகமாக பரவி வருகிறது. இதனால் தினந்தோறும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கபட்டோர் அதிகளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால், அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி இல்லாமல், நோயாளிகள் தரையில் படுக்க வைக்கப்படுவதாக செய்திகள் வெளியாகின்றன.
டெங்குவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினாலும், டெங்கு நோயின் வேகம் அதிகமாகவே உள்ளது. ஆனாலும், டெங்கு நோய் விரைவில் கட்டுப்படுத்தப்படும் என்று தமிழக அரசு கூறி வருகிறது.
அமைச்சர்கள் விஜயபாஸ்கர், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் இன்று ஆய்வு மேற்கொண்டனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். மேலும், நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் அவர்கள் கேட்டறிந்தனர்.
பின்னர், அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் டெங்கு பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றார். 714 சிறப்பு மருத்துவர்கள் அரசு மருத்துவமனையில் நியமிக்கப்படுவார்கள் என்றும் லேப் டெக்னீசியன், செவிலியர்கள் உள்ளிட்டோரை நியமித்துக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
டெங்கு பாதித்த குழந்தைகள் 7 நாட்கள் மருத்துவர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றார். டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.