ஆழ்வார்ப்பேட்டையில் இருந்தவர்கள் தோற்றவர்கள்.. நான் கோபாலபுரத்துக்காரன்.. ஆண்டவரை சொல்கிறாரா உதயநிதி.?

By Asianet TamilFirst Published Nov 26, 2021, 9:47 PM IST
Highlights

"என்னுடைய வீடு ஆழ்வார்பேட்டையில் இருந்தாலும்கூட, நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே கோபாலபுரத்தில்தான். அதனால், நான் எப்போதுமே கோபாலபுரத்துக்காரன்."

ஆழ்வார்பேட்டையில் குடியிருந்தாலும் நான் எப்போதுமே கோபாலபுரத்துக்காரன் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாளை 44-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவருடைய பிறந்த நாளையொட்டி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி உதயநிதி ஸ்டாலின் பேசினார்.    “எனக்கு முன்பு இங்கு பேசியவர், நான் ஆழ்வார்பேட்டையில் இருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு சென்றதாக பேசினார். அது தவறான வாதம்.  ஆழ்வார்பேட்டையில் இருந்தவர்கள் அரசியலில் தோல்வியடைந்து இருக்கிறார்கள்.

என்னுடைய வீடு ஆழ்வார்பேட்டையில் இருந்தாலும்கூட, நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே கோபாலபுரத்தில்தான். அதனால், நான் எப்போதுமே கோபாலபுரத்துக்காரன். கருணாநிதியின் பேரன் என்பதில்தான் எனக்கு பெருமை. அப்படிச் சொல்வதைத்தான் நான் பெருமையாக நினைக்கிறேன். இந்தியாவின் சிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் இருப்பதில் எல்லாம் பெருமையில்லை. இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழ் நாடு வர வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமும் ஆகும்.

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. இதற்கு தடுப்பூசி பெருமளவில் செலுத்தப்பட்டதுதான் காரணம். ” என்று உதய நிதி ஸ்டாலின் பேசினார். ‘ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவர்’ என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனை அழைப்பார்கள். அவர்தான் முன்பு ஆழ்வார்ப்பேட்டையில் வசித்தார். பின்னர் ஈசிஆர் பக்கம் சென்றார். இந்நிலையில், ‘ஆழ்வார்பேட்டையில் இருந்தவர்கள் அரசியலில் தோல்வியடைந்து இருக்கிறார்கள். நான் கோபாலபுரத்துக்காரன்’ என்று உதயநிதி பேசியிருப்பதன் மூலம், கமல்ஹாசனை கிண்டலடிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

click me!