Jai Bhim: ஜெய் பீம் படத்துக்கு எதிராக பாஜக எடுத்த புதிய அதிரடி முடிவு.. திட்டத்தை விளக்கிய ஹெச்.ராஜா..!

By Asianet TamilFirst Published Nov 26, 2021, 8:28 PM IST
Highlights

‘ஜெய்பீம்’ படச் சர்ச்சை இன்னும் முடிவடையாமல் உள்ள நிலையில் ஒரு புறம் பாமக நெருக்கடி கொடுத்து வருகிறது. இதற்கிடையே பாஜகவும் அப்படத்துக்கு எதிராக களமிறங்குகிறது.

‘ஜெய் பீம்’ திரைப்படம் திட்டமிட்டு இந்துக்களுக்குள் மோதலை உருவாக்கி, மத மாற்றத்திற்கான சூழலை ஏற்படுத்தும் நோக்கத்துடன்தான் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்று தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜகவினருக்கான பயிற்சிப் பட்டறை தருமபுரியில் 3 நாட்கள் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தருமரிக்கு வந்திருந்தார். நிகழ்ச்சிக்கு இடையே ஹெச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தலைநகர் சென்னையிலும் தமிழகத்தின் இதர பிற்பகுதியிலும் கடந்த 25 நாட்களுக்கும் மேலாகத் தொடர் மழை காரணமாக கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மழை, வெள்ளம் காரணமாக பொதுமக்களும் விவசாயிகளும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதிமுக ஆட்சி நடந்தபோது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு ஹெக்டேருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும் என அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.  ஸ்டாலின் வலியுறுத்தினார்.

ஆனால், தற்போது அவர்தான் ஆட்சியில் உள்ளார். ஆனால், ஆட்சியில் உள்ள போது ஒரு ஹெக்டேருக்கே ரூ. 20,000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். திமுகவுக்கு ஆட்சியில் இல்லாதபோது ஒரு பேச்சு. ஆட்சியில் உள்ளபோது ஒரு பேச்சு. தமிழகத்தில் நீதிமன்றம் உள்பட அரசுக் கட்டிடங்கள் பலவும் நீர்வழிப் பாதைகள், நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளன. அரசியல், பொதுவாழ்வு, தனிமனித நெறிமுறைகள் உள்ளிட்ட அனைத்திலுமே ஒழுக்கம் தேவை. கடந்த 54 ஆண்டுகளாகவே திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகத்தில் 10 ஆயிரத்து 800 நீர்நிலைகள் மாயமாகிவிட்டன.

தமிழகத்தில் நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்து ஒழுக்க நெறிமுறைகளை வகுக்க வேண்டும். ஆனால், திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு முடிவு கட்டாமல் இந்த நெறிமுறைகளை எல்லாம் வகுக்க முடியாது. தமிழகத்தில் கடந்த ஆறு மாத காலமாக திமுக ஆட்சி உள்ளது. மக்கள் பணியைப் பொறுத்தவரை இந்த ஆட்சி தோல்வி அடைந்துவிட்டது. சென்னையில் நீர் கட்டமைப்புகளை மேம்படுத்துவது, பழுது பார்ப்பது போன்ற பணிகளுக்கு ஆறு மாதங்கள் போதுமானது. இதையெல்லாம் செய்யாததால்தான் மழையில் சென்னை நகரம் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கிறது.

‘ஜெய் பீம்’ திரைப்படம் திட்டமிட்டு இந்துக்களுக்குள் மோதலை உருவாக்கி, மத மாற்றத்திற்கான சூழலை ஏற்படுத்தும் நோக்கத்துடன்தான் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் நோக்கம் எப்படிப்பட்டது என்பதை தொடர்ந்து இந்து மக்களிடையே கொண்டுசேர்க்கும் பணியில் பாஜகவினர் ஈடுபடுவோம்” என்று ஹெச்.ராஜா தெரிவித்தார். ‘ஜெய்பீம்’ படச் சர்ச்சை இன்னும் முடிவடையாமல் உள்ள நிலையில் ஒரு புறம் பாமக நெருக்கடி கொடுத்து வருகிறது. இதற்கிடையே பாஜகவும் அப்படத்துக்கு எதிராக களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.
 

click me!