கலைஞர் உணவகம் வர்லாம், வர்லாம் வா.. வாழ்த்தி வரவேற்கும் செல்லூர் ராஜூ.. ஓபிஎஸ் கருத்தை கண்டுக்காத மாஜி.!

By Asianet TamilFirst Published Nov 26, 2021, 7:52 PM IST
Highlights

“கலைஞர் உணவகங்கள் தொடங்கப்படுவதில் அதிமுகவுக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. கலைஞர் உணவகம் கொண்டு வருவதை வரவேற்கிறோம்;வாழ்த்துகிறோம்."

அம்மா உணவகம் ஏற்கெனவே உள்ள நிலையில் கலைஞர் உணவகம் என்ற பெயரில் புதிய திட்டத்தைத் தொடங்கக் கூடாது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்த நிலையில், “கலைஞர் உணவகம் கொண்டு வருவதை வரவேற்கிறோம், வாழ்த்துகிறோம்” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த மா நாடு ஒன்றில் பங்கேற்ற தமிழக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, “தமிழகத்தில் 500 சமுதாய உணவகங்கள், ‘கலைஞர் உணவகம்’ என்ற பெயரில் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.  “'அம்மா உணவகம்' என்று நடைமுறையில் இருக்கின்ற ஒரு திட்டத்தை அந்தப் பெயரிலேயே விரிவுபடுத்தாமல் புதிதாக அதற்கு 'கலைஞர் உணவகம்' என்று பெயர் வைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. காலப்போக்கில், அம்மா உணவகம் என்ற திட்டத்தையே கலைஞர் உணவகம் என்று மாற்றுவதற்கான ஒரு முயற்சியாக அமைச்சரின் பேச்சு அமைந்திருக்கிறது. 

நடைமுறையில் உள்ள ஒரு திட்டத்தை இரு பெயர்களில் செயல்படுத்துவது என்பது இதுவரை நடைமுறையில் இல்லாத வினோதமான ஒன்று. இது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல” என்று கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும்,”புதிய திட்டங்களுக்கு கலைஞர் பெயர் சூட்ட அதிமுக ஆட்சேபனை தெரிவிக்காது” என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கலைஞர் உணவகம் தொடங்க அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வரவேற்பு தெரிவித்துள்ளார். மதுரையில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் செல்லூர் கே.ராஜு விருப்ப மனுக்களைப் பெற்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கலைஞர் உணவகங்கள் தொடங்கப்படுவதில் அதிமுகவுக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. கலைஞர் உணவகம் கொண்டு வருவதை வரவேற்கிறோம்;வாழ்த்துகிறோம். ஆனால், அம்மா உணவகங்களை மறைக்காமல் கலைஞர் உணவகங்கள் செயல்படுத்த வேண்டும்” என்று செல்லூர் ராஜூ தெரிவித்தார். வேலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக செல்லூ ராஜூ கூறுகையில், “நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும். அதிமுகவை வெல்ல தமிழகத்தில் எந்தவொரு சக்தியும் இல்லை.” என்று தெரிவித்தார்.
 

click me!