நீங்கள் ஆண்டபரம்பரை.. நம் கொடி கோட்டையில் பறக்க வேண்டும்.. பாட்டாளி இளைஞர்களை உசுப்பேற்றிய ராமதாஸ்..

By Ezhilarasan BabuFirst Published Nov 26, 2021, 7:28 PM IST
Highlights

நீங்கள் ஆண்ட பரம்பரையை சேர்ந்தவர்கள், ஆண்ட பரம்பரை வழி வந்தவர்கள், உங்கள் முன்னோல் படை நடத்தி  பார் ஆண்டவர்கள். மன்னர்களாக இருந்தவர்கள், அவர்களின் வழி வழியாக வந்தவர்கள் தான் சிங்கக்குட்டிகள் ஆகிய நீங்கள். ஆனால் இன்று எல்லாவற்றையும் இழந்து, செங்கோலை இழந்து, ஆட்சிக்கு வராமல் அடுத்தவர்களுக்கு துதி பாடிக் கொண்டிருக்கிறோம்

நீங்கள் ஆண்ட பரம்பரை வழி வந்தவர்கள்... ஆனால் அடுத்தவர்களுக்கு துதி பாடிக் கொண்டு இருக்கிறீர்கள்... நாம் தமிழகத்தை ஆள வேண்டும், அன்புமணி ராமதாஸ் முதலமைச்சராக வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கடலூர் கூட்டத்தில் பேசியுள்ளார். பாமக அக்காட்சி இளைஞர்களை தூண்டிவிட்டு அரசியல் செய்கிறது என குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் தற்போது அந்தக் கட்சியின் நிறுவனத் தலைவரே நீங்கள் ஆண்ட பரம்பரை என கட்சி இளைஞர்கள் மத்தியில் பேசியிருப்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

தமிழகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் ஆண்டபரம்பரை கோஷம் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. ஆண்ட பரம்பரை என்றால்,  அடிமை பரம்பரை என்று ஒன்று இருக்கிறது என்றுதானே அர்த்தம்.. இதுதான் சாதிய ஆதிக்க உணர்வு ஊற்றுக்கண், இது அடியோடு ஒழிக்கப்பட வேண்டிய ஒரு மனநிலை என முற்போக்காளர்கள் கூறிவருகின்றனர். சமூகத்தில் ஏற்றத்தாழ்வு களையப்படவேண்டும்,  சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என ஒரு காலத்தில் இட ஒதுக்கீடு போராட்டத்தை முன்னெடுத்த ராமதாஸ் இப்போது வன்னிய சமூகம் இளைஞர்கள் மத்தியில் நீங்கள் ஆண்ட பரம்பரையை சேர்ந்தவர்கள் என பேசியிருப்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

வன்னியர்களுக்காக இடஒதுக்கீடு போராட்டம் நடத்தி அதன்மூலம் தமிழகத்தின் அரசியல் கட்சியாக உருவெடுத்தது பாமக. காலப்போக்கில் அதிமுக- திமுக என இரண்டு கட்சிகளிலும் மாறி மாறி கூட்டணி வைத்து வந்ததால், அக்காட்சி தலைமையின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது. எந்த வன்னியர்களுக்காக கட்சியை ஆரம்பித்து தேர்தல் அரசியலுக்கு வந்தோமோ அதே வன்னியர்கள் முழுவதுமாக பாமக என்ற குடையின் கீழ் அணிதிரள வில்லையே என்பது மருத்துவர் ராமதாஸின் நீண்டநாள் ஏக்கமாக இருந்து வருகிறது.

அந்தக் கட்சி எடுத்த தவறான கொள்கை முடிவுகள், கூட்டணி வியூகங்கள் மக்கள் மத்தியில் எடுபடவில்லை, வட இந்தியாவில் பாஜக எப்படி மதவாதத்தை வைத்து அரசியல் செய்கிறதோ, அதே போல பாமக சாதியை வைத்து அரசியல் செய்கிறது என்று அக்கட்சி மீது அழியாத சாதி முத்திரை குத்தப்பட்டுள்ளது. அதேபோல அடிக்கடி சினிமா நடிகர்களுக்கு எதிராக அக்கட்சி பேசிவருவது, தொடர்ந்து தலித் மக்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் செய்வது போன்ற காரணங்களால் பொதுச் சமூகத்தின் மத்தியில் அதிக வெறுப்பை சம்பாதித்துள்ளது.

பாஜக, அதிமுக என இரண்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தல்ளை எதிர்கொண்டுவரும் பாமக தனது செல்வாக்கு மிகுந்த பகுதிகளிலேயே கடுமையான சரிவை சந்தித்துள்ளது. ஒரு கட்டத்தில் தனித்து தேர்தலை சந்திப்பது என முடிவு செய்து, மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற முழக்கத்துடன் தேர்தலை எதிர்கொண்டும் எதிர்பார்த்த அளவுக்கு அக்கட்சியால் வெற்றி பெற முடியவில்லை. பிறகு வழக்கம்போல அதிமுகவுடன் கூட்டணி என்ற முடிவுக்கே அக்காட்சி தள்ளப்பட்டது.

தற்போது பாஜக உடன் அந்த காட்சியை அதிக நெருக்கம் பாராட்டி வருவதால், சொந்த சமூக மக்களே அக்காட்சியை புறக்கணிப்பதாக ஒரு விமர்சனம் இருந்து வருகிறது. அதேபோல் கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த கட்சி, தனித்தே களம் கண்டும், கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் மனமுடைந்து போன மருத்துவர் ராமதாஸ், கட்சி தொடங்கி 34 ஆண்டுகள் கடந்து விட்டது, ஆனால் இன்னும் கூட பாமகவால் ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை. நாம் யாருக்காக, எதற்காக கட்சி நடத்த வேண்டும்? ஒரேயடியாக கட்சியை கலைத்து விடலாமா?இத்தனை ஆண்டுகளாக அரசியல் நடத்திய எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்றால் தவறு உங்கள் மீதா? என் மீதா எனதொண்டர்கள் மத்தியில் ஆவேசமாக கேள்வி எழுப்பியிருந்தார் அவர்.

இதற்கிடையில் ஜெய்பீம் விவகாரத்தில் நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாமக நடத்தி வரும் போராட்டம், பொது சமூகத்தில் அக்கட்சிக்கு  நெகட்டிவ் இமேஜ்ஜை ஏற்படுத்தியுள்ளது. இந்த போராட்டம் எப்படியாவது வன்னிய மக்களை சாதி ரீதியாக ஒன்று திரட்டி விட வேண்டும் என்ற உள் நோக்கத்துடன்  நடத்தப்படுவதாக அக்கட்சியின் மீது குற்றஞ்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அக்கட்சி தொடர்ச்சியாக சந்தித்து வரும் தொடர் தோல்வியில் இருந்து மீள வழி தேடிவருகிறது. குறிப்பாக வட மாவட்டங்களிலாவது இழந்த செல்வாக்கை மீண்டும் தக்கவைக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் பாமக தள்ளப்பட்டுள்ளது இந்த நெருக்கடிக்கு மத்தியில்தான் அவர் இவ்வாறு பேசியுள்ளார். எப்படியாவது தன் மூச்சு இருப்பதற்குள் அன்புமணியை முதல்வராக்கிவிடவேண்டும் என்று எண்ணத்தில் இருந்துவரும் ராமதாஸ் இவ்வாறு பேசியுள்ளார். 

இந்நிலையில் சமீபத்தில் நடந்த  திண்டிவனம், செஞ்சி மயிலம் ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது அதில், அடுத்து வரும் தேர்தலில் 60 இடங்களை பெறுவதன் மூலம் அன்புமணியை முதல்வராக்கிவிட முடியும் என்றும், அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதேபோல் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், மனம் திறந்து பேசிய அவர், நீங்கள் ஆண்ட பரம்பரையை சேர்ந்தவர்கள், ஆண்ட பரம்பரை வழி வந்தவர்கள், உங்கள் முன்னோல் படை நடத்தி  பார் ஆண்டவர்கள். மன்னர்களாக இருந்தவர்கள், அவர்களின் வழி வழியாக வந்தவர்கள் தான் சிங்கக்குட்டிகள் ஆகிய நீங்கள்.

ஆனால் இன்று எல்லாவற்றையும் இழந்து, செங்கோலை இழந்து, ஆட்சிக்கு வராமல் அடுத்தவர்களுக்கு துதி பாடிக் கொண்டிருக்கிறோம். நம் தமிழகத்தை ஆள வேண்டும், அன்புமணி ராமதாஸ் முதலமைச்சராக வேண்டும். நாம் வெற்றி பெற்றே தீருவோம் என்று நாம் உழைக்க தயாராக இருந்தால் மட்டும் கட்சி பதவியில் இருங்கள்.  இல்லையெனில் மாடு மேய்ப்பவர்களிடம் பொறுப்பைக் கொடுத்து விடுங்கள். அடுத்த தேர்தலில் நாம் வெற்றி பெற வீடுதோறும் கட்சி நிர்வாகிகள் சென்று திண்ணை பரப்புரை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் சமூக வலைதள பரப்புரையை தீவிரப்படுத்த வேண்டும். நீங்கள் வந்தவழி ஆண்ட பரம்பரை வழி இவ்வாறு அவர் பேசியுள்ளார். 
 

click me!