திணித்தவர்கள்தான் நீட் தேர்வு மரணங்களுக்கு பொறுப்பு.. சமூக அநீதிக்கு முடிவு எப்போது.? கொந்தளிக்கும் அன்புமணி!

By Asianet TamilFirst Published Sep 13, 2021, 8:23 AM IST
Highlights

நீட் தேர்வை வலுக்கட்டாயமாக திணித்தவர்கள்தான் தமிழகத்தில் 14 மாணவ, மாணவியரின் தற்கொலைக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு  நடைபெறும் நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கூழையூர் கிராமத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாதோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது இந்த முடிவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு முந்தைய நாட்கள் தற்கொலை காலமாக மாறி வருகின்றன. கடந்த ஆண்டு நீட் தேர்வுக்கு முந்தைய நாளில் மட்டும் 3 மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த ஆண்டு மேட்டூர் மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். மாணவர் தனுஷ் ஏற்கனவே இரு முறை நீட் தேர்வு எழுதிய போதிலும் அவரால் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை. மூன்றாவது முறையாக நீட் தேர்வில் பங்கேற்கும் நிலையில் அதில் எப்படியும் வெற்றி பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்து விட வேண்டும் என்று தனுஷ் தீவிரமாக படித்து வந்தார். 
நேற்று முன் தினம் நள்ளிரவைக் கடந்து 1.00 மணி வரை தந்தையுடன் உரையாடிக் கொண்டிருந்த தனுஷ், அதற்குப் பிறகு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றால், அவர் எந்த அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்  என்பதை உணர்ந்து கொள்ளலாம். அந்த அளவுக்கு நீட் கொடிய மாணவர் கொல்லியாக மாறியிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் கடந்த சில ஆண்டுகளில்  13 பேர் உயிரிழந்துள்ளனர். இப்போது 14&ஆவது நிகழ்வாக மாணவர் தனுஷ் தற்கொலை நிகழ்ந்துள்ளது. நீட் தேர்வை வலுக்கட்டாயமாக திணித்தவர்கள்தான் இந்த 14 மாணவ, மாணவியரின் தற்கொலைக்கு பொறுப்பேற்க வேண்டும். நீட் தேர்வு அச்சத்தால் மாணவ, மாணவியர் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்து கொள்ளும் போது, அது குறித்து மத்திய, மாநில அரசுகள் ஆய்வு செய்து, அதற்கு தீர்வு காண முன்வர வேண்டும். ஆனால், அதற்கான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மத்திய அரசு முன்வராதது மிகவும் கவலையளிக்கிறது.

 
மாணவர் தனுஷின் தற்கொலைதான் தமிழ்நாட்டில் நீட் தேர்வால் நிகழும் கடைசி தற்கொலையாக இருக்க வேண்டும். அதற்கு நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிப்பது தான் சரியாக தீர்வாக இருக்கும். நீட் தேர்வைப் பொறுத்தவரை தமிழ்நாட்டையும், பிற மாநிலங்களையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மருத்துவப் படிப்புக்கு நுழைவுத்தேர்வுகள் இருந்தநிலையிலும் கூட, தமிழ்நாட்டில் நுழைவுத்தேர்வு இல்லை. அதே நிலை நீடிக்க அனுமதிப்பதுதான் கூட்டாட்சி தத்துவத்திற்கு மதிப்பு சேர்க்கும் செயலாக இருக்கும். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிக்க வேண்டும் என்று முந்தைய ஆட்சியில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட  சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தால் இத்தகைய தற்கொலைகள் நிகழ்ந்து இருக்காது.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரும் புதிய சட்டம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அந்த சட்டத்திற்கு எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும் சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து விட்டோம் என்பதுடன் கடமையை முடித்துக் கொள்ளாமல் மத்திய அரசுக்கு தொடர் அழுத்தம் கொடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளிலுள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு அனைத்து வழிகளிலும் பாமக ஒத்துழைக்கும்.
நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவர் தனுஷின் குடும்பத்திற்கு அனிதா தற்கொலை  உள்ளிட்ட நிகழ்வுகளில் வழங்கப்பட்டதைப் போன்று ரூ.7 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ற அரசு வேலையும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அதே நேரத்தில் நீட் தேர்வுக்கு அஞ்சி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்று அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

click me!