அதை நினைக்கும்போதே எனக்கு உள்ளம் நடுங்குகிறது.. பாரதியார் வீட்டில் நிர்மலா சீதாராமன் சொன்ன தகவல்!

By Asianet TamilFirst Published Sep 12, 2021, 10:11 PM IST
Highlights

பள்ளிகளில் பாரதியாரின் பாடல்களைக் கற்றுக்கொடுப்பதன் மூலம் நாட்டுப்பற்று வளரும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
 

எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் மணிமண்டபத்தில் சுதந்திர தின 75-ஆம் ஆண்டு கொண்டாட்டம், மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 100-வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பேசினார். “பாரதியார் பிறந்த மண்ணில் நிற்பதை நினைத்தாலே உள்ளம் நடுங்குகிறது. அவரது ஒவ்வொரு வார்த்தைக்கு அவ்வளவு சக்தி இருக்கிறது. அவர் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து பார்த்தால், அவரால் எப்படி இப்படியெல்லாம் பாட முடிந்தது என்றுதான் தோன்றுகிறது. ஏழ்மை ஒன்றை தவிர எதையும் பார்க்காதவர். அதற்காக தன்மானத்தை விட்டு, எங்கோ ஏதோ உழைக்கிறேன் என்று இருக்கவில்லை. தனக்கு கிடைத்த வேலைவாய்ப்பைகூட எழுதி இந்த நாட்டுக்கு ஒரு உணர்ச்சி உண்டாக்க பாடுபட்டார். அந்தக் காலத்திலேயே பெண்களுக்கென தனி பத்திரிகை நடத்தியவர்.
பாரதியார் 1921-ஆம் ஆண்டில் காலமானார். அப்போது சுதந்திரம் கிடைக்கும் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலை இருந்தது. 1947-ஆம் ஆண்டில் சுதந்திரம் வரும்போது என்ன உற்சாகம் இருந்திருக்குமோ, அதை 1921-ஆம் ஆண்டுக்கு முன்பே பாரதியார் பாடிவிட்டார். பாரதியார் எழுதிய கவிதைகள் எதுவும் எளிமையானதல்ல. ஒவ்வொரு கவிதையும் அவர் உடம்பில் உள்ள உணர்ச்சிகளை பிழிந்து எடுத்து போட்டது. பாரதியாரை தேசிய அளவில் எடுத்துச் செல்ல வேண்டும் என பலர் முயற்சி செய்திருக்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி, காசி விஸ்வவித்யாலயம் பல்கலைக்கழகத்தில், தமிழுக்கு ஒரு இருக்கையை நேற்று அமைத்துள்ளார். எட்டயபுரத்தில் பிறந்த பாரதியார், காசிக்குச் சென்று சமஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம் என எல்லாவற்றையும் கற்று, யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழியை போன்று இனிதாவது எதுவுமில்லை எனக் கவிதையே இயற்றினார். 
தமிழை வளர்க்க வேண்டும். அதில் இன்னும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும். பாரதியார் புகழை எட்டயபுரம் மக்கள் காப்பாற்றி வருகிறார்கள். தேசிய அளவில் பிரதமரே திரும்ப திரும்ப பாரதியார் குறித்து பேசி வருகிறார். பாரதியாரின் புகழ் உலக அளவில் இருக்கிறது. பள்ளிகளில் சின்னசிறு பிள்ளைகளுக்கு பாரதியாரின் பாடல்களை கற்றுக்கொடுங்கள் என்று கோரிக்கை வைக்கிறேன். பாரதியின் நூற்றாண்டை முன்னிட்டு, நம் பிள்ளைகளுக்கு அவருடைய கவிதைகளை எடுத்துச்சொல்ல வேண்டிய நிலை வந்துள்ளது. பாரதியாரின் பாடல்கள் போட்டிகள் வைத்து, பரிசுகள் வழங்குங்கள்” என்று நிர்மலா சீதாராமன் பேசினார். 
 

click me!