தொண்டாமுத்தூர் கள நிலவரம்..! அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தப்புவாரா?

By Selva KathirFirst Published Mar 19, 2021, 10:26 AM IST
Highlights

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் தொடர்ந்து 2 முறை எம்எல்ஏவாக இருக்கும் வேலுமணி தற்போது மூன்றாவது முறையாக களம் இறங்கியுள்ள நிலையில் தொகுதி நிலவரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் உள்ளது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் தொடர்ந்து 2 முறை எம்எல்ஏவாக இருக்கும் வேலுமணி தற்போது மூன்றாவது முறையாக களம் இறங்கியுள்ள நிலையில் தொகுதி நிலவரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் உள்ளது.

தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த பவர் செண்டராக வலம் வருபவர் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. நான்கு வருடங்களுக்கு முன்பு வரை சைலன்ட் அரசியல்வாதியாக இருந்து வந்த எஸ்.பி.வேலுமணி எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரான பிறகு அதிரடி அரசியல்வாதியாகியுள்ளார். முதலமைச்சருடனான நெருக்கத் பயன்படுத்தி தொண்டாமுத்தூர் தொகுதியில் கடந்த நான்கு வருடங்களில் எஸ்.பி.வேலுமணி ஏராளமான நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். தொண்டாமுத்தூர் மட்டும் இன்றி சுற்றுவட்டாரங்களில் உள்ள கிராமங்களிலும் அரசின் நலத்திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதை கண்கூடாக காண முடிகிறது.

சாலைவசதிகள் இல்லாத கிராமமே தொண்டாமுத்தூர் தொகுதியில் இல்லை என்று கூறும் வகையில் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளனர். கோவை நகருக்கு இணையாக தொண்டாமுத்தூர் தொகுதியில் சாலைகள் பளபளப்பாக உள்ளன. இதே போல் குடிநீர் இணைப்புகளை பொறுத்தவரை தெருவுக்கு ஒரு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு என்பதே இல்லை. இதே போல் தொகுதியில் முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, பெண்கள் திருமண உதவித் தொகை, பெண்கள் மகப்பேறு நலத்திட்டம் போன்றவற்றை பெற்றுக்கொடுப்பதற்கு என்றே தனி டீம் வைத்துள்ளார் வேலுமணி.

இதனால் தொண்டாமுத்தூர் தெராகுதியை பொறுத்தவரை பொதுமக்கள் மிக எளிதாக அரசின் திட்டங்களை பெற்றுவிடுகின்றனர். ஆனால் இந்த நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொடுப்பதில் எஸ்.பி.வேலுமணி டீம் பாகுபாடு காட்டுவது ஒரு நெகடிவ் விஷயம். அதிலும் குறிப்பாக திமுகவினர் என்று தெரிந்தால் அவர்களுக்கு எதுவும் கிடைக்காமல் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்கிறது அந்த டீம். இதே போல் நலத்திட்ட உதவிகளைபெற்றுக் கொடுத்த பிறகு அவர்களிடம் சென்று சிலர் தலையை சொறிந்து கொண்டு நிற்பதாகவும் புகார்கள் உள்ளனர். இவைகளை தவிர்த்து பார்த்தால் கடந்த பத்து வருடங்களில் எஸ்.பி.வேலுமணியின் செயல்பாடுகள் பாராட்டும் வகையிலேயே உள்ளன.

தொண்டாமுத்தூரில் திமுக சார்பில் களம் இறங்கியிருக்கும் கார்த்திகேய சிவசேனாபதி தொகுதிக்கு தொடர்பு இல்லாதவர் என்பது அவருக்கு பின்னடைவு தான். மேலும் திமுகவிலும் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இணைந்துள்ளார். கட்சியினரை ஒருங்கிணைத்து தேர்தல் வேலை செய்யும் சூட்சமம் அவருக்கு சுத்தமாக தெரியவில்லை. இதே போல் தொண்டாமுத்தூர் தொகுதியை பற்றியும் பெரிய அளவில் அவருக்கு விழிப்புணர்வு இல்லை என்கிறார்கள். மேலும் களப்பணியை காட்டிலும் ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் மூலம் அரசியல் செய்யும் வேலையை மட்டுமே கார்த்திகேய சிவசேனாபதி செய்வதாக சொல்கிறார்கள்.

அதே சமயம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்களுக்கு கண்டிப்பான உத்தரவு போட்டு கார்த்திகேய சிவசேனாதிபதிக்கு தேர்தல் பணியாற்றுமாறு கூறியுள்ளார். இதனால் திமுகவினர் பம்பரமாக சுழன்று தொகுதிக்குள் வலம் வருகின்றனர். சில இடங்களில் அதிமுகவினருக்கு டப் கொடுக்கும் வகையில் திமுகவினரின் பணிகள் உள்ளது. தொண்டாமுத்தூரை பொறுத்தவரை அங்கு கவுண்டர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அவர்களின் ஒட்டு மொத்த ஆதரவு வேலுமணிக்கே உள்ளது. அதனை சரி செய்ய திமுக தரப்பு முயற்சித்து வருகிறது.

அதே சமயம் தொகுதியில் உள்ள முஸ்லீம்கள் திமுக வேட்பாளர் பின்னால் அணிவகுத்து நிற்கின்றனர். முதல் தலைமுறை வாக்காளர்கள் கமல் கட்சிக்கு ஆதரவு அளிக்கும் மனநிலையில் உள்ளனர். ஆனால் தேர்தல் பணி என்று வந்தால் வேலுமணிக்கு அருகே கூட திமுக வேட்பாளரால் வர முடியாது என்பதால் தொண்டாமுத்தூர் மறுபடியும் அதிமுக வசம் ஆகும் நிலை தான் தற்போது உள்ளது.

click me!