
தமிழக அரசின் சட்டப்பேரவை இன்று காலை கூடியது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது, மீனவ, விவசாயிகள் நலனில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது எனவும் ஜெயலலிதாவுக்கு நினைவு இல்லம் அமைக்கும் அரசின் முயற்சிக்கு பாராட்டுக்கள் எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் 10 இடங்களில் காய்கறிக் கிடங்கு அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விலையில்லா ஆடு வழங்கும் திட்டம் தொடரும் என்று ஆளுநர் உரையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
சிறந்த நிர்வாகத்தை அரசு தொடர்ந்து வழங்கும் என்று நம்புகிறேன் என ஆளுநர் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் குடிமராமத்து பணிகளுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டு தெரிவித்துள்ளார். நிதிப்பற்றாக்குறை இருந்தாலும் 7-வது ஊதியக்குழு பரிந்துரை செயல்படுத்தப்பட்டுள்ளது. சிறந்த ஆட்சி நிர்வாகத்தை அரசு தொடர்ந்து வழங்கும் என்று நம்புகிறேன் ஆளுநர் பன்வாரிலால் கூறியுள்ளார்.
இதில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியை தோற்கடித்த சுயேட்சை எம்.எல்.ஏ டிடிவி தினகரன் முதல்முதலாக கலந்து கொண்டார்.
பின்னர், வெளியே வந்த டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆளுநர் உரையில், டெல்டா பகுதியில் மீத்தேன் திட்டத்தை தடை செய்வதை பற்றியும் அங்கு வாழும் மக்களை பாதுகாப்பது குறித்தும் எந்த அறிவிப்பும் இடம்பெற வில்லை என குறிப்பிட்டார்.
மேலும் அதேபோல் கூடங்குளம் அனு உலையில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருவதாகவும் அதை சரிசெய்வதற்கும் அதனை சுற்றியுள்ள மக்களின் பாதுகாப்பு பற்றியும் எந்த அறிவிப்பும் இல்லை என தெரிவித்தார்.
அரசாங்கம் செயல்படவில்லை எனவும் புதிதாக உலை தொடங்க வேண்டிய அவசியம் என்ன எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரி மேலான்மை வாரியம் அமைப்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை எனவும் பெண்கள், முதியோர் மேம்பாட்டுக்காக எந்த அறிவிப்பும் இல்லை எனவும் குற்றம்சாட்டினார்.
ஆளுநர் உரையில் முக்கிய பிரச்சனைகள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை எனவும் காணாமல் போன 22 மீனவர்களை பற்றி எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை எனவும் தெரிவித்தார்.
அரசாங்கத்தை ஆதரிக்குமாறு கவர்னர் பேசினதே தவறு எனவும் அவர்களுக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்பதை தான் முதலில் கேட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.