
தமிழ்நாட்டில் கோமாளிகளின் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது என்பது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தெரியும். அப்படி இருக்கையில், அவர்கள் எப்படி தமிழ்நாட்டில் முதலீடு செய்வார்கள் என சுயேட்சை எம்.எல்.ஏ தினகரன் கேள்வி எழுப்பினார்.
முதன்முறையாக சட்டமன்ற கூட்டத்தில் கலந்துகொண்ட தினகரன், கூட்டம் முடிந்த பின்னர், ஆளுநர் உரை குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, கூடங்குளம் அணு உலையின் உதிரி பாகங்களின் தரம் சரியில்லை. இதுகுறித்து மத்திய அரசின் அறிக்கை ஒன்றில் கூட குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள், தங்களின் பாதுகாப்புக்காக போராடுகிறார்கள். ஆனால் அதை பற்றிய எந்தவிதமான அறிவிப்பும் ஆளுநர் உரையில் இல்லை. பாதுகாப்பற்று இருக்கும் கூடங்குளம் மக்களின் பாதுகாப்புக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதுவரை சரியாக செயல்படவில்லை என்பதுதான் மக்களின் குற்றச்சாட்டு.
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிப்பது தொடர்பாக அறிவிப்பு இல்லை. வீட்டுக்கு ஒரு கழிப்பறை தொடர்பான அறிவிப்பு இல்லை.
பெண்களுக்கு இருசக்கர வாகன மானியத்தொகை 20000 ரூபாயிலிருந்து 25000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
திட்டத்தை செயல்படுத்தவே இல்லாமல், உதவித்தொகையை உயர்த்துவது அபத்தம். திட்டங்கள் தொடர்பான அனைத்து அறிவிப்புகளும் காகிதங்களில்தான் உள்ளது. ஆசிரியர்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்களின் நிலுவைத் தொகையை வழங்குவது தொடர்பான அறிவிப்பு இல்லை.
111 சட்டமன்ற உறுப்பினர்கள் தான் உள்ளனர். மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிடாமல் அரசு எழுதிக் கொடுத்ததை ஆளுநர் படிக்கிறார். முதல் கூட்டம் என்பதால், முழுமையாக கலந்துகொள்ள வேண்டும். அதற்காகத்தான் முழுமையாக கலந்துகொண்டேன்.
மேஜையை தட்டி அவர்களின் பயத்தை மூடிமறைக்கிறார்கள். மத்திய அரசை பார்த்தாலே பயப்படும் இவர்கள் எப்படி மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்குத் தேவையானதை கேட்டு பெறுவார்கள்? ஆளுநர் உரை வெறும் கண் துடைப்புதான். மெஜாரிட்டி இல்லாத அரசுக்கு ஆளுநர் ஆதரவளிப்பதே ஜனநாயகப் படுகொலைதான்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து விமர்சித்த தினகரன், தமிழ்நாட்டில் நடப்பது கோமாளிகளின் ஆட்சி என்பது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தெரியும். இவர்களை நம்பி, அவர்கள் எப்படி தமிழ்நாட்டில் முதலீடு செய்வார்கள். மத்திய அரசின் கைப்பாவையாக இருப்பவர்கள் ஆட்சி செய்யும் தமிழகத்தை விடுத்து மற்ற மாநிலத்திற்கு சென்றுவிடுவார்கள் என தினகரன் தெரிவித்தார்.