
தலைவர் “ரஜினிகாந்த் சொல்வதைக் கேட்டு ரசிகர்கள் நடந்தால், அவர் கோட்டையைப் பிடிப்பது உறுதி” என நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.
ரஜினியின் ஆன்மீக அரசியல் பிரவேசத்திற்கு முன் நடந்த ரசிகர்கள் சந்திப்பில் பேசிய ரஜினிகாந்த், ரசிகர்களுக்கு “கிடா வெட்டி கறி சோறு போடணும்னு ஆசை, ஆனால் இந்த மண்டபத்தில் போட வாய்ப்பில்லை. ஒருநாள் அதற்கு ஏற்பாடு செய்வேன்” என்று பேசினார். ரஜினியின் இந்த ஆசையை நிறைவேற்றும் விதமாக மதுரை மாவட்ட ரஜினி ரசிகர்கள் மதுரை அழகர்கோவில் அருகே ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு ஆட்டுக்கறி விருந்தளித்தனர்.
இந்த விழாவில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ் செய்தியாளர்களிடம் பேசிய போது, “அரசியலில் ஈடுபடுவது உறுதி என அறிவித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு எப்போதும் ஆதரவாக இருந்து, அவரின் காவலனாக இருந்து தொடர்ந்து பணியாற்றுவேன்”, ‘நடிகர்களை மக்கள் ஏற்பார்களா?’ என்ற கேள்விக்கு, “தேர்தலின்போதுதான் பதில் தெரியவரும். மக்கள் விரும்பும் சூப்பர் ஸ்டாரான ரஜினியை அரசியலிலும் வரவேற்பார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
“இவ்வளவு நாள் நாம் அரசியல் ஒரு சாக்கடை என்று பேசி வந்தோம். அந்த அசுத்தத்தை ஆன்மிக அரசியல் மூலம் சுத்தம் செய்யவே ரஜினி அரசியலுக்கு வந்திருக்கிறார். ஆன்மிகத்துக்கும் மதவாதத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது. மனச்சாட்சிப்படி உன் மனதில் ஆண்டவன் இருக்கிறான் என்றால் அதுதான் ஆன்மிகம்” என ரஜினியின் ஆன்மீக அரசியல் பிரவேசத்திற்கு புது விளக்கத்தை அளித்தார் லாரன்ஸ்.
மேலும் பேசிய அவர், “ரஜினிகாந்த் கூறுவதைக் கேட்டு அதன்படி ரசிகர்கள் நடந்தால் அவர் கோட்டையைப் பிடிப்பது உறுதி” என கூறினார்.