அதிமுக அரசுக்கும், திமுக அரசுக்கும் உள்ள வித்தியாசம் இதுதாங்க... ஆர்.பி.உதயகுமார் ஆதங்கம்..!

By Thiraviaraj RMFirst Published Aug 9, 2021, 5:27 PM IST
Highlights

அம்மாவின் அரசு அமைந்திருந்தால் எடப்பாடியாரும், ஓபிஎஸ்சும் சாக்கு போக்கு சொல்லாமல் தேர்தல் அறிக்கையில் கூறியபடி மாதம்தோறும் 1500 ரூபாயும், அதேபோல் இலவச வாஷிங்மெஷினும் வழங்கியிருப்பார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்

அம்மாவின் அரசு அமைந்திருந்தால் எடப்பாடியாரும், ஓபிஎஸ்சும் சாக்கு போக்கு சொல்லாமல் தேர்தல் அறிக்கையில் கூறியபடி மாதம்தோறும் 1500 ரூபாயும், அதேபோல் இலவச வாஷிங்மெஷினும் வழங்கியிருப்பார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்

திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் நடந்த கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஆர்.பி. உதயகுமார், "கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் சாலை வசதி, குடிநீர் வசதிகளை அம்மா அரசு உருவாக்கி கொடுத்துள்ளது. கொரோனா முதல் அலை ஏற்பட்டபோது உயிரைப் பற்றி கவலைப்படாமல் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று நடவடிக்கை எடுத்ததால் பிரதமரின் பாராட்டை எடப்பாடியார் பெற்றார்.

தற்போது வெள்ளை அறிக்கை எதற்கு? ஆட்சி அதிகாரம் உங்கள் கையில் இருக்கிறதே. இதை சட்டசபையில் விவாதத்திற்கு வைக்கலாமே. நிதிநிலை அறிக்கையில் துறைகளுக்கான நிதி நிலை எவ்வளவு, அதனால் இழப்பு எவ்வளவு என்பதை விவாதத்திற்கு வைத்தால் சட்டமன்றத்தில் விவாதிக்க தயாராக இருக்கிறோம். நாட்டு மக்களும் அந்த விவாதத்தை காணத் தயாராக இருக்கிறார்கள். `தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு இந்த வெள்ளை அறிக்கை தொடக்க புள்ளியா..? அல்லது வாக்குறுதியை நிறைவேற்றாமல் தப்பித்துக்கொள்ள முற்றுப்புள்ளியா..’ என்று மக்கள் இப்போது கேட்கிறார்கள்.

ஆட்சி அதிகாரம் உங்கள் கையில் உள்ளது. அதிகாரிகளும் இருக்கிறார்கள். நீங்கள் கேட்டால் எந்த புள்ளி விவரத்தையும் தருவார்கள். வருவாய் எவ்வளவு இருக்கிறது, எவ்வளவு பற்றாக்குறை இருக்கிறது. இவ்வளவு செலவினம் இருக்கிறது, எவ்வளவு கடன் இருக்கிறது. இதுதான் நிதிநிலை அறிக்கையின் சாரம்சம். திட்டங்களுக்காக இவ்வளவு ஒதுக்கீடு, உடனடி செல்விற்தற்காக இவ்வளவு நிதி செய்ய உள்ளது, தொலைநோக்கு திட்டத்திற்கு இவ்வளவு செலவினம் உள்ளது. என்பதை நீங்கள் நிதிநிலை அறிக்கையில் எடுத்துச் சொல்லி அதை விவாதிக்கலாம்.

அதைவிடுத்து 2011-லிருந்து ஆட்சியின் நிதி நிலைமையை வெள்ளை அறிக்கையாக விடுவோம் என்று சொல்லி மக்களை திசை திருப்பி அதிமுக மீது களங்கத்தை சுமத்த நினைத்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் 52 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி கொடுத்துள்ளோம். இரண்டு கோடிக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசியை வழங்கியுள்ளோம். ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கினோம். உழவர்களுக்கு பாதுகாப்பு திட்டம், மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டம் என பல திட்டங்கள். இப்படி மக்களின் வரவேற்பை பெற்ற பல்வேறு திட்டங்களுக்கு நிதியை ஒதுக்கி வந்தோம்.

தாய்மார்களுக்காக மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், அதை இன்னும் நிறைவேற்றவில்லை. அம்மாவின் அரசு அமைந்திருந்தால் எடப்பாடியாரும், ஓபிஎஸ்சும் சாக்கு போக்கு சொல்லாமல் தேர்தல் அறிக்கையில் கூறியபடி மாதம்தோறும் 1500 ரூபாயும், அதேபோல் இலவச வாஷிங்மெஷினும் வழங்கியிருப்பார்கள். அதுதான் அம்மா அரசுக்கும், திமுக அரசுக்கும் உள்ள வித்தியாசம். 2011 முதல் அம்மா அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளும் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன. வெள்ளை அறிக்கை என்ற பெயரில் எங்கள் மீது பழி போட நினைத்தால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என்று பேசினார்.
 

click me!