
இன்று பாஜக கட்சியின் ஸ்தாபன தினம் அதுமட்டுமின்றி பாஜக தொண்டர்கள் தமிழகத்தில் பாஜகவை வலிமையாக உருவாக்குகின்ற நாள் என்றும், அனைவரும் வாக்களிப்பது ஜனநாயக உரிமை அதை நிறைவேற்ற வேண்டுமென பாஜக தலைவர் எச். ராஜா கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் காலை முதலே மக்களோடு மக்களாக நின்று வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். திமுக தலைவர் மு.க ஸ்டாலின், முதலமைச்சல் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் விஜய், அஜீத் உள்ளிட்டோர் ஜனநாயக கடமை ஆற்றினார்.
தமிழக சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக 20 தொகுதியில் போட்டியிடுகிறது. இந்நிலையில் காரைக்குடி வேட்பாளராக களத்தில் நிறுத்தப்பட்டுள்ள எச்.ராஜா இன்று காலையே தன் மனைவியுடன் வாக்கு சாவடி மையத்திற்கு வருகைதந்தார். மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்த அவர் தனது ஜனநாயக கடமையாற்றினார். அதனைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அனைவரும் வாக்களிப்பது என்பது ஜனநாயக உரிமை அதை தவறாமல் நிறைவேற்ற வேண்டும் என வெளியிட்டுள்ளார். வாக்களிப்பதற்கு முன் அவர் கூறியிருப்பதாவது:
காரைக்குடி சட்டமன்ற தொகுதி பூத் எண் 69 ல் வாக்கு செலுத்தி என் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினேன். அனைவரும் வாக்களிப்பது என்பது ஜனநாயக உரிமை. ஆகவே அதை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். என பதிவிட்டுள்ளார். வாக்களிப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னர் அதே டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 1980 ஏப்ரல் 6 ந்தேதி உருவாக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபன தினம் இன்று, பாஜக தொண்டர்கள் தமிழகத்தில் பாஜகவை வலிமையாக உருவாக்குகின்ற நாள். அதற்கான பணிகளில் நாம் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வோம் என அவர் கூறியுள்ளார்.