
தமிழகம் முழுவதும் மக்கள் பெரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள் என்ற செய்தி மகிழ்ச்சி அடையச் செய்கிறது. தேர்தல் ஜனநாயகத்தில் ஒவ்வொரு வாக்கும் வரலாற்றை மாற்றி எழுதும், எனவே அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இன்று காலை தனது குடும்பத்தினருடன் வாக்களித்த அவர், அதன்பின் தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள், திரைபிரலங்கள் உள்ளிட்டோர் காலை முதலை வாக்களித்து வருகின்றனர். திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இன்று காலை தனது குடும்பத்தாருடன் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து புறப்பட்டு நேராக கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கிருந்து மகன் உதயநிதி மற்றும் மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோருடன் தேனாம்பேட்டை SIET கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமை ஆற்றினார்.
வாக்கு மையத்திற்குள் நுழைந்தபோது மக்களைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டவாறு வந்த அவர், அமைதியான முறையில் மக்களோடு மக்களாக நின்று வாக்களிக்க உள்ளதால் கூட்டம் சேர வேண்டாம் என தொண்டர்களிடம் அவர் வலியுறுத்தினார். வாக்குச்சாவடி மையத்திற்கு முக கவசம் அணிந்து வந்த ஸ்டாலின் தனது குடும்பத்தாருடன் சமூக இடைவெளியை பின்பற்றி வாக்களித்தார்.வாக்குப்பதிவுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். ஜனநாயக கடமையை மக்கள் சிறப்பாக ஆற்றிக்கொண்டு உள்ளனர். இதன் முடிவு மே2-ம் தேதி சிறப்பாக இருக்கும், அது உறுதி, தோல்வி பயத்தால் தேர்தலை ஒத்தி வைக்க ஆளும் கட்சி முயற்சி.தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை திருப்தி என்றும் சொல்ல முடியாது அதிருப்தி என்றும் சொல்ல முடியாது என கூறினார்.
பின்னர் தனது டுவிட்டர் பக்கத்தில கருத்து பதிவிட்டுள்ள அவர், தமிழகம் முழுவதும் மக்கள் பெரும் ஆர்வத்துடன் வாக்களிக்கிறார்கள் என்ற செய்தி மகிழ்ச்சியடையச் செய்கிறது. எங்கள் குடும்பத்தில் அனைவரும் வாக்களித்தோம்! தேர்தல் ஜனநாயகத்தில் ஒவ்வொரு வாக்கும் வரலாற்றை மாற்றி எழுதும்! எனவே கட்டாயம் வாக்களிக்கவும் அதே நேரத்தில் COVID19 முன்னெச்சரிக்கை அவசியம். என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.