
தேசமெங்கும் ரஜினி ஜூரம் பற்றி எரிகிறது!
தனது படம் ஓடுவதற்காக மட்டுமே அவ்வப்போது ‘அரசியல் குரல்’ கொடுத்து தன் ரசிகர்களை தூண்டிவிடுவார் எனும் கடும் விமர்சனம் எழுந்து வந்த நிலையில், தற்போது ரசிகர்களுக்காகவே இந்த போட்டோ ஷூட்டையும், அரசியல் குறித்த ஆழமான முடிவையும் எடுக்கிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
அதுமட்டுமல்ல, தனது இரு மகள்களின் திருமணத்துக்கு ரசிகர்களை அழைக்காத நிலையில் ‘விருந்தளிக்கிறேன்’ என்று சொல்லிச் சொல்லி காலம் தாழ்த்தி வந்ததான குற்றச்சாட்டு ஒன்றும் வலுவாக உண்டு.
ஆனால் அதையும் பெருமளவு நிவர்த்தி செய்துவிட்டார் என்கிறார்கள் அவரது நண்பர்கள்.
எப்படியாம்?...
போட்டோ எடுக்கையில், மேடையின் வலதுபுறம் வழியாக சென்று ரஜினியுடன் போட்டோ எடுத்து முடித்ததும் இடது புறம் வழியாக கீழே இறங்கினர் ரசிகர்கள். உடனே நேராக டைனிங் ஹாலுக்கு அழைத்து செல்லப்பட்டு பாயசத்துடன் கூடிய விமரிசையான சைவ சாப்பாடு வழங்கப்பட்டே அனுப்பப்பட்டார்கள். கிட்டத்தட்ட இதுவே ஒரு கல்யாண விருந்தாகிவிட்டது.
ரஜினியை சந்திக்க வீட்டுக்கோ அல்லது மண்டபத்துக்கோ சென்றால் அவரை சுற்றி இருப்பவர்கள் மிக மோசமாக ரியாக்ட் செய்து துரத்துகிறார்கள்! என்றொரு புகாரும் உண்டு. ஆனால் இந்த போட்டோ ஷூட்டின் போது மிக கனிவுடன் நடத்தப்பட்டிருக்கின்றனர் ரசிகர்கள். ரஜினியுடன் போட்டோ எடுக்கும் போது, ஏற்கனவே கொடுத்திருந்த கட்டளையை கேட்காமல் அவரை அதிகம் நெருங்குவது, செல்ஃபி எடுக்க முயல்வது போன்ற அதிகப்பிரசங்கி வேலை பார்க்கும் நபர்கள் மட்டுமே பவுன்சர்களால் அலேக்! செய்யப்பட்டனரே தவிர வேறொரு பிரச்னையுமில்லை.
ஆக இந்த போட்டோ செஷன் மூலம், நேரடியாக ரசிகர்களை சந்திப்பதில்லை! போட்டோ எடுப்பதில்லை! ஒரு வாய் சோறு போடவில்லை! எனும் எல்லா புகார்களுக்கும் ஒற்றை ’மூவ்’ மூலம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் ரஜினி.
டாட்!
- விஷ்ணு பிரியா