
தமிழகத்தை காப்பாற்ற பாமகவை ஆட்சியில் அமர்த்த சொல்லவில்லை. எங்களைவிட நல்லவர்கள் இருந்தால் அவர்களை ஆட்சியில் அமர்த்துங்கள் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
பாமக சார்பில் புத்தாண்டு சிறப்பு மாநில பொதுக்குழு கூட்டம் மதுரையில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அன்புமணி, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கிடைத்த வெற்றியை தமிழக கட்சிகள் அவர்களால் கிடைத்ததாக பெருமை கொள்கின்றனர். ஆனால், பாமக மட்டுமே இந்த வெற்றி இளைஞர்களால் கிடைத்த வெற்றி என்று சொன்னது. ஜல்லிக்கட்டுக்கு திரண்ட இளைஞர்கள் ஊழலுக்கு எதிராகவும் திரள வேண்டும். அவர்கள் வராதவரை தமிழகத்துக்கு விடிவுகாலம் கிடையாது.
ஒவ்வொரு தமிழனும் என்னுடைய வாக்கு விற்பனைக்கு இல்லை என்ற உறுதிமொழியை எடுக்க வேண்டும். அந்த உறுதிமொழியை பாமகவினர் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும்.
தற்போது இளைஞர்கள் விழித்துக்கொண்டுள்ளனர். அவர்கள் பாமக பின்னால் அணிவகுப்பர். இடைத்தேர்தலில் பணம் கொடுப்பதைத் தடுக்க தேர்தலுக்கு முந்தைய நாள் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும். ஒருமுறை அல்ல. தொடர்ந்து 4 முறை தள்ளிவைத்தால் எந்த கட்சியினரும் அதன்பிறகு வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மாட்டார்கள்.
தமிழகத்தைக் காப்பாற்ற எங்களைத்தான் ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் என்று சொல்லவில்லை. எங்களைவிட நல்லவர்கள் இருந்தால் அவர்களை கொண்டுவாருங்கள். தமிழகத்தில் வரும் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த ஆட்சி மாற்றம் பாமக மூலமே ஏற்படும் என அன்புமணி நம்பிக்கையுடன் பேசினார்.