இது இடைக்கால ஏற்பாடு மட்டுமே! விவசாயிகள் போராட்டம் தீவிரமடையும்.. மத்திய அரசை எச்சரிக்கும் திருமாவளவன்.

Published : Jan 13, 2021, 10:50 AM IST
இது இடைக்கால ஏற்பாடு மட்டுமே!    விவசாயிகள் போராட்டம் தீவிரமடையும்.. மத்திய அரசை எச்சரிக்கும் திருமாவளவன்.

சுருக்கம்

இதனை ஒரு எச்சரிக்கையாகவும் வழிகாட்டுதலாகவும் புரிந்துகொண்டு மோடி அரசு மக்கள் விரோத வேளாண்சட்டங்களை முற்றாகத் திரும்பப் பெற்றுக்கொள்வதுடன், குறைந்தளவிலான ஆதார விலையைத் தீர்மானிக்கும் சட்டம் ஒன்றை உடனே அவசர சட்டமாக இயற்றவேண்டும்.

மூன்று வேளாண் சட்டங்களையும் முற்றாக ரத்து செய்ய வேண்டும் எனவும், எம்.எஸ்.பி - அவசர சட்டம் உடனே இயற்ற வேண்டும் எனவும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவரது சார்பில்  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் விவரம்:  மக்கள் விரோத வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை வழங்கியிருப்பது ஆறுதலையும் நம்பிக்கையையும் அளிக்கிறது.

கடந்த 50 நாள்களாக தொடர்ந்து நடக்கும் விவசாயிகளின் மாபெரும் அறப்போராட்டமும் 'தில்லிக்குள் நுழைவோம்' என்கிற அடுத்தக்கட்ட போராட்ட அறிவிப்பும் தான் ஆட்சியாளர்களை, அதிகார வர்க்கத்தினரை இம்மியளவு அசைத்திருக்கிறது. இது விவசாயிகள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கான தீர்வல்ல என்றாலும், உச்சநீதிமன்றம் அளித்துள்ள இந்த 'இடைக்காலத் தடை' மக்கள் போராட்டத்துக்குக் கிடைத்துள்ள ஒரு இடைக்கால வெற்றியே ஆகும். 

இதனை ஒரு எச்சரிக்கையாகவும் வழிகாட்டுதலாகவும் புரிந்துகொண்டு மோடி அரசு மக்கள் விரோத வேளாண்சட்டங்களை முற்றாகத் திரும்பப் பெற்றுக்கொள்வதுடன், குறைந்தளவிலான ஆதார விலையைத் தீர்மானிக்கும் சட்டம் ஒன்றை உடனே அவசர சட்டமாக இயற்றவேண்டும். அதற்கான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும்.  மாறாக, புதுதில்லிக்குள் விவசாயிகள் நுழைவதைத் தடுப்பதற்காகவே, ஒரு இடைக்கால ஏற்பாடாக இந்த தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது எனில், அது மேலும் விவசாயிகளின் போராட்டத்தைப் பன்மடங்கு தீவிரப்படுத்துமேயொழிய நீர்த்துப்போகச் செய்யாது.  அதாவது, அரசும் நீதித்துறையும் உள்ளீடான ஒரு புரிதலில் இப்படியொரு நிலைப்பாடு எடுத்து, இடைக்காலத் தடை ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்குமேயானால், அது போராட்டக்குழுவினரை - போராடும் மக்களைப் பின்வாங்கச்செய்யாது. 

ஏனெனில், அவர்கள் ஆட்சியாளர்களின் போக்குகளையும் அவர்களின் உண்மை இயல்புகளையும்  உணர்ந்துதான், தங்களின்  உறுதிப்பாடு குலையாமல்  இரண்டுமாத காலமாகப் போராட்டத்தைத் தொடருகின்றனர். எனவே, மோடி அரசு விவசாயிகளின் போர்க்குணத்தைக் குறைவாக மதிப்பீடு செய்யாமல், போராட்டத்திலுள்ள ஞாயத்தை ஏற்றுக்கொண்டு, உடனே வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, 'எம்.எஸ் சுவாமிநான் ஆணையத்தின்'  பரிந்துரையின்படி, குறைந்த அளவிலான விலையைத் (MSP) தீர்மானிக்கும் அவசர சட்டத்தை உடனே இயற்றவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். 

 

PREV
click me!

Recommended Stories

இந்து என்பதில் திருமாவுக்கு என்ன பிரச்சனை..? ஸ்டாலின் ஆர்எஸ்எஸ்-காரராக இருக்க வேண்டும்..! ராம சீனிவாசன் அதிரடி..!
எடப்பாடி பழனிசாமி ரொம்ப நேர்மையானவர்.. திமுக அரசே சர்டிபிகேட் கொடுத்துடுச்சு..! ஆர்ப்பரிக்கும் அதிமுக..!