“இந்த அவசரம் ஆளுநருக்கு அழகல்ல!” - கொரோனா படுக்கையிலும் கெத்து காட்டும் துரைமுருகன்.

Published : Apr 08, 2021, 03:44 PM IST
“இந்த அவசரம் ஆளுநருக்கு அழகல்ல!”  - கொரோனா படுக்கையிலும் கெத்து காட்டும் துரைமுருகன்.

சுருக்கம்

இது போதாது என்று தென் மண்டலத் தேசியப் பசுமைத் தீர்ப்பாய உறுப்பினராக, கிரிஜா வைத்தியநாதனை மத்திய அரசு அதன் பங்கிற்கு நியமித்து இருக்கிறது. தேர்தல் வருவதற்கு முன்பு இருந்த நடைமுறையில் இருந்த விஷயங்கள்தான் இவை.  

புதிய அரசு வருவதற்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் ஆளுநர் அவசர அவசரமாக பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி மற்றும் பசுமை தீர்ப்பாய உறுப்பினர் பதவிகளை நிரப்புவது ஆளுநர் பதவிக்கு அழகல்ல என  விமர்சித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 

தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் பொதுத் தேர்தல் 6.4.2021 அன்று தான் நடந்து முடிந்திருக்கிறது.ஆட்சி மாற்றத்திற்கான சூழலை இந்தத் தேர்தல் உருவாக்கி இருக்கின்ற நல்ல தருணம் இது. புதிய அரசு பல புதிய சிந்தனைத் திட்டங்களோடு பதவிக்கு வரும் என்ற நிலை மிகத் தெளிவாகத் தெரிகிறது.வாக்குப் பதிவு நடந்த அன்றோ, அடுத்த நாளோ வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு இருந்தால், இந்நேரம், தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி பதவி ஏற்றிருக்கும். 

ஆனால் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் சுமார் ஒருமாத காலம் இடைவெளி இருக்கிறது.இந்த இடைப்பட்ட காலத்தில் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதுதான் மரபு. புதிய அறிவிப்புகளை, அதுவும் பல்கலைக் கழகத்தின் நிர்வாகப் பொறுப்பைப் பல ஆண்டுகளுக்கு ஏற்கப் போகும் துணை வேந்தரின் பெயரை ஆளுநர் அவர்கள் அவசர அவசரமாக வெளியிட்டு இருப்பது ஆளுநர் பதவிக்கு அழகல்ல. தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத் துணை வேந்தராக டாக்டர் திரு. செல்வகுமார் அறிவிக்கப்பட்டிருப்பதாகச் செய்தித்தாள்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. 

பல நாட்களாக நிரப்பப்படாமல் இருந்த இந்தப் பதவியைப் புதிய அரசு வந்து நிரப்பினால் இமயமலை என்ன இரண்டாகவா பிளந்து விடும்! இது போதாது என்று தென் மண்டலத் தேசியப் பசுமைத் தீர்ப்பாய உறுப்பினராக, கிரிஜா வைத்தியநாதனை மத்திய அரசு அதன் பங்கிற்கு நியமித்து இருக்கிறது. தேர்தல் வருவதற்கு முன்பு இருந்த நடைமுறையில் இருந்த விஷயங்கள்தான் இவை. இதில் எந்த அரசியல் நோக்கமும் கிடையாது என்று ஆயிரம் காரணங்களை ஆளுநர் மாளிகை கூறினாலும், பொறுத்ததுதான் பொறுத்தீர் இன்னும் ஏன் ஒரு மாத காலம் பொறுக்கக் கூடாது என்பதுதான் எமது கேள்வி. 

முறையான துணை வேந்தர்களை நியமிக்காததால், அகில உலகப் புகழ் பெற்ற சென்னைப் பல்கலைக் கழகம் எப்படிச் சீர்கெட்டு அழிந்து நிற்கிறது என்பதைப் பல்வேறு ஊடகங்கள் எடுத்துக் காட்டி இருக்கிறது. முடிந்தால் அவற்றை ஆளுநரின் செயலாளர்கள் ஆளுநர் பார்வைக்குக் கொண்டு செல்லட்டும். இந்த அவசரம் ஆளுநருக்கு அழகல்ல! அவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!