தேர்தலுக்குப் பிறகும் விடாமல் விரட்டும் கொரோனா... ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் வேட்பாளருக்கு தொற்று உறுதி...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 8, 2021, 3:29 PM IST
Highlights

ஸ்ரீபெரும்புதூர்  தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கிய  கு.செல்வப்பெருந்தகைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

​தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நல்ல முறையில் நிறைவடைந்தது. தேர்தல் பிரச்சாரத்தின் போது எவ்வித அரசியல் கட்சி பாகுபாடுகளும் இல்லாமல் வேட்பாளர்களை துரத்தி, துரத்தி தொற்றிய கொரோனா வைரஸால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வேட்பாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், அவர்கள் இல்லாமல் வாக்கு சேகரிப்பு, பிரச்சார கூட்டங்கள் நடந்த தேர்தலாகவும் இது தான் இருந்தது. 


சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் அண்ணா நகர் தொகுதி வேட்பாளர் பொன்ராஜ், வேளச்சேரி தொகுதி வேட்பாளரான சந்தோஷ் பாபு,  சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன் ராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவரா, விருகம்பாக்கம் தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி, திருவள்ளூர் அமமுக வேட்பாளர் குரு, திமுகவை பொறுத்தவரை குறிஞ்சிபாடி தொகுதி வேட்பாளர் பன்னீர்செல்வம், அம்பத்தூர் வேட்பாளர் ஜோசப் சாமுவேல், பாபநாசம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளரும், மமக தலைவருமான ஜவாஹிருல்லா ஆகியோருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், திமுக எம்.பி. கனிமொழி ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சூறாவளி பிரச்சாரம் செய்தவர்களை எல்லாம் சுழட்டிப்போட்ட கொரோனா வைரஸ், தேர்தலுக்குப் பிறகாவது சற்றே அமைதியாகும் என காத்திருந்த வேட்பாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி கிடைத்துள்ளது.  ஸ்ரீபெரும்புதூர்  தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கிய  கு.செல்வப்பெருந்தகைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள செல்வப்பெருந்தகை ‘‘எனக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டேன். மேலும், என்னுடன் தொடர்பில் இருந்த நண்பர்கள், கட்சியினர், உறவினர்கள் கட்டாயம் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் ’’என பதிவிட்டுள்ளார். 
 

click me!