அறிவியல்பூர்வமற்ற மற்றும் பிடிவாதமான நிலைப்பாடு காரணமாக, ஒவ்வொரு நாளும் பல்வேறு நோய்த் தொற்று உருவாக மத்திய அரசு அனுமதித்து வருகிறது. மிகப்பெரிய பேரழிவு நாட்டை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. மோடி அரசைப் போல் உலகில் எந்த ஜனநாயக அரசும், இதுபோல் கொடூரமாக, உணர்வற்று இருந்தது இல்லை.
எந்தவிதமான முன்பதிவும் இன்றி அனைத்து வயதினருக்கும் இலவசமாகத் தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியமான நேரம் இது என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியுள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,26,789ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா, சத்தீஸ்கர். கர்நாடகா, உத்தரப்பிரதேசம், டெல்லி, மத்திய பிரதேசம், தமிழகம், பஞ்சாப், குஜராத் உட்பட 11 மாநிலங்களில் பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனால், பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
undefined
இன்னொரு பக்கம் இந்தியாவில் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளான கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணியில் முதல் கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கும், 2ம் கட்டமாக பொதுமக்களில் மூத்த குடிமக்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. உலக அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது.
தற்போதைய நிலையில் 60, 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்படுகிறது. அதற்கான அறிவிப்பினையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆனால் இதற்கு முன்பதிவு செய்வது கட்டாயம் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த மத்திய அரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளன.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதிஅமைச்சருமான ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று இந்திய மருத்துவ அமைப்பு ஆலோசனை தெரிவித்துள்ளது. பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களும், இதே கருத்தைத்தான் வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி தேவையில்லை என்று மத்திய அரசு கூறுகிறது. எந்தவிதமான முன்பதிவும் இன்றி அனைத்து வயதினருக்கும் இலவசமாகத் தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியமான நேரம் இது. அறிவியல்பூர்வமற்ற மற்றும் பிடிவாதமான நிலைப்பாடு காரணமாக, ஒவ்வொரு நாளும் பல்வேறு நோய்த் தொற்று உருவாக மத்திய அரசு அனுமதித்து வருகிறது. மிகப்பெரிய பேரழிவு நாட்டை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. மோடி அரசைப் போல் உலகில் எந்த ஜனநாயக அரசும், இதுபோல் கொடூரமாக, உணர்வற்று இருந்தது இல்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கை முதல், தடுப்பூசி முகாம் வரை, பாஜக, மற்றும் மோடி அரசின் தவறான கொள்கைகளால், மக்கள் மிகப்பெரிய விலை கொடுத்து வருகிறார்கள் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.