இந்த செயல் எல்லாத்தையும் சீர்குலைச்சிடுமே... எச்சரிக்கும் டாக்டர் ராமதாஸ்..!

By Asianet TamilFirst Published Jun 4, 2021, 9:37 PM IST
Highlights

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் வேறு காரணங்களால் இறந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அதைத் திருத்தி கொரோனாவால் உயிரிழந்ததாகப் புதிய இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸ் தாக்குதலின் முதல் மற்றும் இரண்டாவது அலைகளில் நேற்று வரை 25,665 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா நோய் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதை விடப் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்றாலும்கூட இது அதிகாரபூர்வ எண்ணிக்கை ஆகும். இவர்கள் அனைவரும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக அரசே அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
ஆனால், அவ்வாறு உயிரிழந்தவர்களுக்காக வழங்கப்படும் இறப்புச் சான்றிதழ்களில் பலர் நிமோனியா, மாரடைப்பு, சிறுநீரகச் செயலிழப்பு போன்ற காரணங்களால் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது தவறு. கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பல நேரங்களில் நிமோனியா, சிறுநீரக பாதிப்பு, மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுவது உண்டு. ஆனால், அவர்களின் இறப்புக்கு அந்த நோய்கள் காரணமல்ல. கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதன் பின்விளைவாகத்தான் அவர்களுக்குப் பிற நோய்கள் ஏற்பட்டு உயிரிழக்கின்றனர். அதனால் அவர்கள் கரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்ததாகத்தான் கருதப்பட வேண்டும். மாறாக பிற நோய்களால் அவர்கள் உயிரிழந்துவிட்டதாக சான்றளிப்பதை ஏற்க முடியாது.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் தவிக்கின்றன. சில இடங்களில் தாய், தந்தை என இரு பெற்றோரையும் இழந்த குழந்தைகள் ஆதரவற்றவர்களாகிவிட்டனர். அவர்களின் எதிர்காலத்திற்கு மத்திய, மாநில அரசுகள் உத்தரவாதமளிக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து, பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யப்படும் என்று தமிழக அரசும், அந்தக் குழந்தைகளின் 23-வது வயதில் ரூ.10 லட்சம் கிடைக்கும் வகையில் வைப்பீடு செய்யப்படும் என்று மத்திய அரசும் அறிவித்துள்ளன. இவை தவிர மாத நிதியுதவி, கல்வி உதவி உள்ளிட்ட மேலும் பல உதவிகளும் மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டுள்ளன.
மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள இத்தகைய உதவிகளை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் பெற வேண்டுமானால், அவர்கள் கொரோனா வைரஸ் தாக்குதலில்தான் உயிரிழந்ததாக இறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிமோனியா காய்ச்சல், மாரடைப்பு போன்ற காரணங்களால் உயிரிழந்ததாகச் சான்றிதழ் அளிக்கப்பட்டிருப்பதால் அவர்களின் குடும்பத்தினரால் மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீட்டைப் பெற முடியாது.
கொரோனா வைரஸ் தாக்குதலால் பல குடும்பங்கள் குடும்பத் தலைவரை இழந்துள்ளன. சில குடும்பங்கள் குடும்பத் தலைவர், குடும்பத் தலைவி ஆகிய இருவரையும் இழந்துள்ளன. வருவாய் ஈட்டும் உறுப்பினர்கள் இல்லாமல் ஒரு குடும்பம் இயங்குவது எவ்வளவு சிரமம்? என்பதை அனைவரும் அறிவார்கள். அத்தகைய குடும்பங்கள் குறைந்தபட்சத் தேவைகளுடன் இயங்குவதற்கு அரசின் உதவி தேவை. அதை உணர்ந்து தான் மத்திய, மாநில அரசுகள் சில உதவிகளை அறிவித்துள்ளன. அந்த உதவிகள் போதுமானவை இல்லை என்றாலும் கூட, தேவைகளை ஓரளவு நிறைவேற்றுவதற்கு துணை நிற்கக்கூடியவையாகும். ஆனால், அதைக் கூட பெற முடியாத அளவுக்கு இறப்புச் சான்றிதழில் தவறான காரணங்களைக் குறிப்பிடுவது மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளும் சாதகமான அனைத்து நடவடிக்கைகளையும் சீர்குலைப்பதாகும்.


எனவே, தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழ்களில் இறப்புக்காகக் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்கள் குறித்து அரசு ஆய்வு செய்ய வேண்டும். கொரோனாவால் உயிரிழந்தவர்கள் வேறு காரணங்களால் இறந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அதைத் திருத்தி, கொரோனாவால் உயிரிழந்ததாக புதிய இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். அதன் மூலம் கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

click me!