தமிழக நலனில் அக்கறை உள்ள மோடி சர்க்கார்.. பெருமிதத்தில் பாஜக தலைவர் எல்.முருகன்..!

By Asianet TamilFirst Published Jun 4, 2021, 9:15 PM IST
Highlights

தமிழக நலனில் அதிக அக்கறை கொண்ட, துயர் தீர்க்கும் அரசாக மத்தியில் உள்ள மோடி அரசு உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொற்று இல்லாத மாநிலமாகத் தமிழகம் மாறி வருகிறது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கூறியது அறிந்து மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. படுக்கைகள் காலியாக உள்ளன. ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது மனதுக்கு ஆறுதலாக உள்ளது. இரு தினங்களுக்கு முன்பு வரை 35 ரயில்கள் மூலம் 2,18,896 டன் ஆக்சிஜன் தமிழகம் வந்துள்ளது. நேற்றும் 2 ரயில்களில் 159 டன் ஆக்சிஜன் வந்து சேர்ந்துள்ளது. இதையும் சேர்த்து தமிழகத்திற்கு மொத்தம் 2,34,758 டன் ஆக்சிஜன் வந்துள்ளது.
இன்னும் தேவைப்பட்டாலும் மத்திய அரசு அனுப்பி வைக்கத் தயாராக உள்ளது. தமிழக நலனில் அதிக அக்கறை கொண்ட அரசுதான் மத்தியில் ஆளும் மோடி அரசு ஆகும். தடுப்பூசிகளைத் தயாரிக்கும் பணியினைத் துரிதப்படுத்த 3 பொதுத்துறை நிறுவனங்களான ஐஐஎல், இந்தியன் இம்யூனாலாஜிக்கல்ஸ் லிமிடெட் மற்றும் பிப்கால் & ஹாப்கைன் பயோபார்ம் சூட்டிகல் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களுக்குத் தேவையான சாதனங்கள் மற்றும் நிதி உதவி செய்யப்பட்டுள்ளது. எனவே, தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும்.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் எனச் செய்திகள் வந்தன. அக்கடிதத்தில் தடுப்பூசிகளை ஒதுக்கீடுகள் செய்வதில் தமிழகத்திற்கு முதலிடமும், செங்கல்பட்டில் உள்ள ஹெச்.எல்.எல் பயோடெக் நிறுவனத்தை தமிழக கட்டுப்பாட்டில் தந்தால் தடுப்பூசி விரைந்து தயாரிக்க இயலும் என்ற கோரிக்கைக்கு மத்திய அரசே அதனைத் தொடங்க உள்ளதாகச் செய்தி அறிந்தோம் எனத் தெரிவித்து, அதனை உடனடியாகச் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டியுள்ளார். தமிழக பாஜக சார்பிலும் இதே கருத்தை வலியுறுத்தி உள்ளோம். சம்பந்தப்பட்ட அமைச்சகத்திடம் இதற்கான துரிதப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளோம்.
தமிழகத்தில் கருப்புப் பூஞ்சை மருந்துக்குக் கடும் தட்டுப்பாடு உள்ளதாகச் செய்தி வெளியிட்ட ஊடகங்கள், தமிழக பாஜக மூத்த தலைவர்கள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண சிறப்பு கவனம் செலுத்தக் கூடாதா எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். நாட்டில் 3 நிறுவனங்கள் மட்டுமே ஆம்போடெரிசின் - பி மருந்தைத் தயாரிப்பதால் நாடு முழுவதும் தட்டுப்பாடு உள்ளது. இம்மாதிரியான சூழல் இதற்கு முன்பு இல்லாததால், அதற்கான உற்பத்தி தேவை இல்லாமல் இருந்தது. இப்போது நெருக்கடியைத் தீர்க்க மத்திய சுகாதார அமைச்சகம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு என்றும் மக்கள் துயர் தீர்க்கும் அரசாகச் செயல்படுகிறது. உரிய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றும் அரசு இதுவாகும்" என்று அறிக்கையில் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
 

click me!