+2 தேர்வை நடத்தலாமா?... நாளை சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 4, 2021, 7:11 PM IST
Highlights

+2 பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக நாளை  மருத்துவ நிபுணர்கள் மற்றும் சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய பின் உரிய முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்

மத்திய அரசு சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ததை அடுத்து, குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 7 மாநிலங்களில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்று வரும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து கடந்த 2ம் தேதி  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கல்வியாளர்கள், மருத்துவ நிபுணர்கள், பெற்றோர்கள், மாணவர் அமைப்பினர் ஆகியோரது கருத்துக்களை பெற்று தெரிவிக்கும் படி பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து பெற்றோர்களின் கருத்துக்களை கேட்டறிய ஆன்லைன் மூலம் கேட்டறிய ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் தங்களுடைய பிள்ளைகளுடன் ஆஜரான ஏராளமான பெற்றோர்கள் +2 பொதுத்தேர்வை நடத்துவது தான் சிறந்தது என கருத்து தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து காணொலி காட்சி வாயிலாக கல்வியாளர்கள்,  ஆசிரியர்கள் ஆகியோரிடம் கேட்கப்பட்ட கருத்துக்களில் 60 சதவீதம் பேர் தேர்வை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். 

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், கல்வியாளர்கள், பெற்றோர் நலச்சங்கங்கள், மாணவ அமைப்பினர் ஆகியோருடன் இன்று மாலை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கூறியதாவது: தமிழகத்தில் கண்டிப்பாக நீட் தேர்வை நுழைய விடமாட்டோம். +2 பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக நாளை  மருத்துவ நிபுணர்கள் மற்றும் சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய பின் உரிய முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்” என தெரிவித்துள்ளார். 


 

click me!