
மோடி அரசுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள மதச்சார்பற்ற கட்சிகளை ஒரே அணியில் இணைக்கும் பணியில் பிஸியாக இருக்கிறார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி.2019 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில், ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் ராகுல்காந்தி, தமிழக காங்கிரஸ் கட்சியை கவனிக்கத் தவறியதில்லை.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி என தமிழகம் முழுவதும் 72 மாவட்டத் தலைவர்கள் ராகுல்காந்தியின் உத்தரவால் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
ராகுலின் இந்த உத்தரவு கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கை என்று தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்து வந்தனர். ஆனால் திருநாவுக்கரசருக்கு எதிராக உள்ளடி வேலை செய்யும் நிர்வாகிகளையும், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு மட்டும் ஆதரவாகச் செயல்படும் தலைவர்களையும் காவு காவு வாங்கவே இந்நடவடிக்கை என பொதுவெளியில் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த விமர்சனம் குறித்து முதலில் கருத்து தெரிவிக்காத தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தற்போது இதற்கான விளக்கத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், " யாரையும் பழிவாங்கும் நோக்கத்தில் மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்படவில்லை.
காங்கிரஸ் கட்சியில் ஒரே அணி தான் உள்ளது. கோஷ்டிகள் இங்கு இல்லை. தமிழக அரசுடன் மத்திய அரசு ஒருங்கிணைந்து செல்வதில் தவறில்லை அழுத்தம் தரக் கூடாதுதங்கள் மீதான குற்றச்சாட்டை பா.ஜ.க. மறந்துவிட்டு கடந்த கால ஆட்சியை குறைகூறக் கூடாது" இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.