அவரு தப்பா ஒன்னும் சொல்லலையே... மரண கலாய் கலாய்த்த துரைமுருகனுக்கு முட்டுக்கு கொடுத்த திருநாவு...

By sathish kFirst Published Nov 26, 2018, 9:24 AM IST
Highlights

கூட்டணி குறித்து துரைமுருகன் ’கஸ்டமர்கள்’ அதுவும், ‘பழைய கஸ்டமர்கள்’ என்று  தெரிவித்த கருத்தில் தவறு ஏதுவும் இல்லை” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

மதிமுக, விசிக மற்றும் இடதுசாரிகள் பல்வேறு பிரச்சினைகளில் திமுகவுடன் இணைந்து செயலாற்றி வருகின்றனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தந்தி தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்திருந்த திமுக பொருளாளர் பேட்டியின் போது துரைமுருகன், “நாங்கள் இன்னும் முழுமையான கூட்டணி அமைக்கவில்லை. ஆனால் எங்களிடம் காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் உள்ளனர். அவர்கள் ‘பழைய கஸ்டமர்கள்’ என்றார். இப்போது இருக்கிறவர்கள் எங்களின் நண்பர்கள். அவர்கள் கூட்டணிக் கட்சிகள் இல்லை” என்று கூறியிருந்தார். ’கஸ்டமர்கள்’ அதுவும், ‘பழைய கஸ்டமர்கள்’ என்று மரண கலாய் கலாய்த்தார். இது அரசியல் தளத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், திமுகவும் நாங்களும் நண்பர்கள்தான் என்று தெரிவித்திருக்கிறார் திருமாவளவன்.

இந்த நிலையில் புதுச்சேரியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த திருநாவுக்கரசர், “துரைமுருகன் தனது பேட்டியில் தவறாக ஏதும் கூறவில்லை. கூட்டணியில் யார் இருக்கிறார்கள் என்பதன் முழு வடிவம் தேர்தல் அறிவிக்கப்பட்டுப் பேச்சுவார்த்தையின் மூலமாக முடிவு செய்யப்பட வேண்டியது. இந்தப் பொருளில்தான் அவர் கூறினார். அதற்கு முன்னர் காங்கிரஸ் எங்களது வாடிக்கையாளர் என்று விளையாட்டாகக் கூறியிருக்கிறார்” என்று விளக்கினார்.

மேலும், காங்கிரஸ், முஸ்லிம் லீக்குடன் கூட்டணி தொடர்வதாகவும், ஏற்கெனவே நடைபெற்ற தேர்தலில் கூட்டணியில் இடம்பெறாத கட்சிகளான மதிமுகவும், விசிகவும் இப்போது கூட்டணியில் இல்லை என்றும், அது தேர்தல் அறிவித்த பிறகு பேசி முடிவு செய்ய வேண்டிய விஷயம் என்றும்தான் துரைமுருகன் சொல்லியுள்ளார் எனத் தெரிவித்த திருநாவுக்கரசர்,

“கூட்டணியில் அக்கட்சிகள் இருக்கவே போவதில்லை என்றோ, இல்லவே இல்லை என்றோ அல்லது சேர்க்க மாட்டோம் என்றோ துரைமுருகன் கூறவில்லை. கூட்டணி என்பது பேசி முடிவு செய்ய வேண்டிய விஷயம். இந்த நாளில் கூட்டணியில் இல்லை. ஆனால், ஒன்றாகச் செயல்பட்டு வருகிறோம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இதில் ஒன்றும் தவறு இல்லையே” என்றும் பதிலளித்தார். 

click me!