தூது விட்ட திருமாவளவன்! காக்க வைக்கும் எடப்பாடி!

By sathish kFirst Published Nov 14, 2018, 10:05 AM IST
Highlights

சந்திக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தூது அனுப்பிய நிலையில் அங்கிருந்து எந்த ரெஸ்பான்சும் வராதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஞாயிறன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலையத்தில் இருந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு ஒரு கடிதம் சென்றுள்ளது. மிக அவசரம் என்கிற குறிப்புடன் சென்ற அந்த கடிதம் நேராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனை வாங்கி படித்த போது தான் கடிதம் திருமாவளவன் கைப்பட எழுதியது என்று தெரியவந்துள்ளது. மேலும் சேலத்தில் ராஜலட்சுமி என்கிற சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து பேச வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை பார்த்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே கொலையாளியை கைது செய்துவிட்டோம், இந்த நிலையில் இந்த விவகாரத்தை திருமாவளவன் ஏன் மீண்டும் எழப்ப நினைக்கிறார் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு சந்திப்பிற்கான காரணமாகத்தான் சேலம் சிறுமி விவகாரத்தை குறிப்பிட்டுள்ளார், ஆனால் பேச வேண்டியது தேர்தல் தொடர்புடைய விஷயமாக கூட இருக்கலாம் என்று முதலமைச்சரிடம் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர்.

திருமாவளவன் தான் தி.மு.க கூட்டணியில் உள்ளாரே என்ற போது, தற்போது சிதம்பரம் தொகுதி விவகாரத்தில் தி.மு.கவுக்கும் – திருமாவுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் நாடாளுமன்ற தேர்தலில் தனக்கு உள்ள வாய்ப்புகள் குறித்து அறிந்து கொள்ள உங்களை சந்திக்க முயற்சிக்கலாம் என்று முதலமைச்சர் எடப்பாடியிடம் கூறியுள்ளனர்.

அப்படி என்றால் ஓ.பி.எஸ்சிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு திருமாவிற்கு பதில் அனுப்பலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி கூறிவிட்டு இந்த விவகாரத்தை கிடப்பில் போட்டுள்ளார். உடனடியாக அழைப்பு வரும் என்று திருமாவளவன் எதிர்பார்த்திருந்த நிலையில் வரவில்லை. இதனை தொடர்ந்து திருமாவளவன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மிக நெருக்கமான ஒருவரை அழைத்து பேசியதாக சொல்லப்படுகிறது.

இதனை தொடர்ந்து திங்களன்று மாலை நான்கு மணிக்கு முதலமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக அந்த நபர் திருமாவிடம் கூறியதாகவும், இதனை நம்பி ஊடகங்களுக்கு திருமாவளவன் தரப்பு இந்த செய்தியை கசியவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமி தற்போதைக்கு திருமாவை சந்திக்க வேண்டாம், அவரை காத்திருக்க சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டதாக பேசப்படுகிறது. இதனால் முதலமைச்சரிடம் இருந்து வரும் அழைப்பிற்காக திருமாவளவன் காத்திருப்பதாக கூறப்படுகிறது.

click me!