அங்கன்வாடி பணிநியமனத்தில் அல்வா! திண்டுக்கல் சீனிவாசனை துரத்தும் அ.தி.மு.கவினர்!

By vinoth kumarFirst Published Nov 14, 2018, 9:37 AM IST
Highlights

பணிக்கு பரிந்துரை செய்து வேலை ஒதுக்கப்படாததால் அதிருப்தியில் இருந்த நிர்வாகிகள் சிலர் மேடையில் அமர்ந்திருந்த திண்டுக்கல் சீனிவாசனிடம் நேருக்கு நேராக சென்று வாக்குவாதம் செய்தனர். இதனால் பொறுத்து பொறுத்து பார்த்த அமைச்சர் ஆதரவாளர்கள் ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அங்கன்வாடி மைய பணியாளர்கள் பணி நியமனத்தில் அ.தி.மு.க நிர்வாகிகளின் பரிந்துரை நிராகரிக்கப்பட்ட விவகாரம் திண்டுக்கல் சீனிவாசனுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மூன்று மாத காலமாகவே திண்டுக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியிடங்களை நிரப்புவதற்கான ஏற்பாடு ஜரூராக நடைபெற்று வருகிறது. 3 லட்சம் ரூபாய் 5 லட்சம் ரூபாய் வரை ஒரு பணியிடத்திற்கு வசூல் செய்யப்படுகிறது. இதில் ஒரு லட்சம் ரூபாய் கட்சிக்கு என்றும் எஞ்சிய தொகையை அமைச்சர் முதல் பரிந்துரைத்த கிளைச் செயலாளர் வரை பகிர்ந்து கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 

ஜெயலலிதா இருந்தவரை இதே முறையில் தான் அங்கன்வாடி பணியாளர்களுக்கான பணிநியமனம் நடைபெற்று வந்துள்ளது. 5 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டால் அதில் ஒரு லட்சம் ரூபாய் கட்சி நிதியாக செலுத்தப்பட வேண்டும். எஞ்சிய 4 லட்சம் ரூபாயில் அமைச்சருக்கு ஒரு லட்சம் ரூபாய் என்றும் மேலும் சில கட்சி நிர்வாகிகளுக்கு குறிப்பிட்ட தொகை என்றும் ஒரு விதி பின்பற்றப்பட்டு வந்துள்ளது.

இதனை நம்பி திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு அ.தி.மு.க நிர்வாகிகள் அங்கன் வாடி மையத்தில் வேலை வாங்கி தருவதாக பணம் வசூல் செய்துள்ளனர். மேலும் ஒவ்வொரு பிரமுகரும் தங்களுக்கு வேண்டிய நபரை பரிந்துரை செய்து பணி வழங்குமாறு அமைச்சருக்கு கடிதமும் கொடுத்துள்ளனர். ஆனால் கட்சி நிர்வாகி பரிந்துரைத்த எவருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. 

சென்னையில் நேரடியாக அமைச்சர் தொடர்புடைய ஆட்கள் பணத்தை பெற்றுக் கொண்டு பணிநியமன ஆணைகளை வழங்கி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அ.தி.மு.க நிர்வாகிகளிடம் பணம் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு நச்சரிக்க ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் தான் கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் பழனி அருகே திண்டுக்கல் சீனிவாசன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்று இருந்தார். அப்போது அங்கு வந்த கட்சி நிர்வாகி ஒருவர் அங்கன்வாடி மைய பணியாளர் நியமனத்தில் அ.தி.மு.கவினரின் பரிந்துரைகள் நிராகரிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.

 

மேலும் அமைச்சருடன் அந்த நிர்வாகி வாக்குவாதமும் செய்தார். மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நிகழ்ந்த இந்த சம்பவத்தால் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டது. இந்த நிலையில் தான் திண்டுக்கல்லில் நடைபெற்ற தேர்தல் ஆலோசனை கூட்டத்திலும் அங்கன்வாடி பணிநியமன பிரச்சனை வெடித்தது. பணிக்கு பரிந்துரை செய்து வேலை ஒதுக்கப்படாததால் அதிருப்தியில் இருந்த நிர்வாகிகள் சிலர் மேடையில் அமர்ந்திருந்த திண்டுக்கல் சீனிவாசனிடம் நேருக்கு நேராக சென்று வாக்குவாதம் செய்தனர். இதனால் பொறுத்து பொறுத்து பார்த்த அமைச்சர் ஆதரவாளர்கள் ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்தனர். 

அமைச்சரிடம் வாக்குவாதம் செய்த கட்சி நிர்வாகிகளை அவர்கள் விரட்டி விரட்டி தாக்கினர். நாற்காலிகள் வீசப்பட்டன. சில நிர்வாகிகளுக்கு அமைச்சர் ஆதரவாளர்கள் தர்ம அடி கொடுத்து அனுப்பி வைத்தனர். வலி தாங்க முடியாமல் வெளியே ஓடியவர்கள் நேராக தலைமை கழகத்திற்கு புகார்களை பேக்ஸ் செய்துள்ளனர். இந்த பிரச்சனை விரைவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பஞ்சாயத்துக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!