அதிருப்தியில் பா.ஜ.க! பதறிப்போன லதா! ரஜினி விளக்கம் அளித்ததன் பின்னணி!

By sathish kFirst Published Nov 14, 2018, 9:41 AM IST
Highlights

பா.ஜ.கவிற்கு எதிராக அனைத்து கட்சிகள் ஒன்று சேர்வது குறித்து நேற்று முன் தினம் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி கூறிய கருத்துகள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில் அது குறித்து நேற்று ரஜினி விளக்கம் அளித்தன் பின்னணியில் அவர் மனைவி லதா இருப்பது தெரியவந்துள்ளது.

சென்னையில் நேற்று முன் தினம் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினியிடம், பா.ஜ.கவிற்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்வதை சுட்டிக்காட்டி பா.ஜ.க அந்த அளவிற்கு ஆபத்தான கட்சியா என்று வினவப்பட்டது. இதற்கு பதில் அளித்த ரஜினி அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்தால் அவர்களுக்கு நிச்சயம் ஆபத்தான கட்சியாகவே இருக்க முடியும் என்று ரஜினி பதில் அளித்துவிட்டு சென்றார்.

இதனை தொடர்ந்து ரஜினி பா.ஜ.கவை ஆபத்தான கட்சி என்று கூறிவிட்டதாக பல்வேறு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. தேசிய ஊடகங்கள் பலவும் கூட பா.ஜ.கவை ரஜினி ஆபத்தான கட்சி என்று கூறிவிட்டதாக செய்திகளில் முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பின. உண்மையில் ரஜினி அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்றாலும் இந்த விவகாரத்தில் ஒரு பெரும்குழப்பம் ஏற்பட்டது.

ரஜினியின் இந்த பேட்டி உடனடியாக பா.ஜ.க தேசிய தலைமை வரை சென்றுள்ளது. ரஜினி ஏன் இப்படி பேசினார்? என்று சென்னையில் ரஜினியுடன் தொடர்பில் இருக்கும் மிக முக்கிய நபரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. உடனடியாக அந்த நபர் ரஜினியை தொடர்பு கொண்டு மேலிடத்தில் இருந்து கேட்கிறார்கள் என்று சொல்ல, தான் பா.ஜ.கவை ஆபத்தான கட்சிஎன்று சொல்லவே இல்லை ஊடகங்கள் திரித்து வெளியிடுகின்றன என்று ரஜினி பதில் அளித்துள்ளார்.

ஆனால் இந்த பதில் பா.ஜ.க மேலிடத்திற்கு திருப்தியை தரவில்லை என்று கூறப்படுகிறது. உடனடியாக ரஜினி விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும் என்று பா.ஜ.க மேலிடம் கருதியுள்ளது. ஆனால் விளக்கம் எல்லாம் கொடுக்க முடியாது என்று ரஜினி நேற்று முன்தினம் வரை திட்டவட்டமாக கூறி வந்துள்ளார். ஆனால் ரஜினியின் இந்த பேச்சை பலரும் தேர்தல் சமயத்தில் பயன்படுத்த கூடும் என்பதால் விளக்கம் அவசியம் என்று பா.ஜ.க மேலிடம் நெருக்கியதாக சொல்லப்படுகிறது.

உடனடியாக ரஜினியின் மனைவி லதாவிடம் பா.ஜ.க தரப்பில் இருந்து பேசப்பட்டுள்ளது. உண்மையில் ரஜினி பா.ஜ.கவை ஆபத்தான கட்சி என்று கூறவில்லை என்றால் உடனடியாக விளக்கம் கொடுக்க சொல்லுங்கள், இல்லை என்றால் தற்போதுள்ள சுமூக உறவில் சிக்கல் ஏற்படும் என்கிற ரீதியில் பேசப்பட்டுள்ளது. இதனால் பதறிப்போன லதா ஒரு அறிக்கை கொடுத்துவிடலாம் என்று ரஜினியை சமாதானம் செய்துள்ளார்.

ஆனால் பா.ஜ.கவிற்காக மட்டும் விளக்கம் கொடுத்தால் அந்த கட்சியிடம் நாம் பணிந்துவிட்டது போன்ற தோற்றம் ஏற்படும் என்று ரஜினி பிடிவாதம் காட்டியுள்ளார். அப்போது தான் ஏழு தமிழர்கள் விவகாரத்திலும் ரஜினி பேச்சு திரிக்கப்படுவது தெரியவந்தது. உடனடியாக செய்தியாளர்களை சந்தித்து ஏழு தமிழர்கள் விவகாரத்தை தெளிவுபடுத்திவிட்டு, பா.ஜ.கவை அப்படி கூறவே இல்லை என்று சொல்லிவிடலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.

இதன் பிறகே நேற்று காலை ரஜினி செய்தியாளர்களை சந்தித்து பா.ஜ.க விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவித்தார். மேலும் அனைத்து எதிர்கட்சிகளையும் விட மோடியே பலசாலி என்கிற அர்த்தத்தில் பா.ஜ.க தலையில் பெரிய கிரீடத்தையும் தூக்கி வைத்துவிடடு ரஜினி சென்றுள்ளார். இந்த விவகாரத்தில் ரஜினியின் மனைவி லதா, தலையிடவில்லை என்றால் பிரச்சனை வேறுமாதிரி அதாவது வருமான வரித்துறை சோதனை அளவிற்கு கூட சென்று இருக்கலாம் என்று பேசப்படுகிறது.

click me!