
பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக நடிகை குஷ்பூ பேட்டி அளித்தது தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிடுவது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் பொது சிவில் சட்டம் குறித்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு பாஜகவுக்கு ஆதரவாக பேசியுள்ளாரே என்ற கேள்விக்கு திருமாவளவன் கூறியதாவது:
குஷ்பூ இவ்வாறு பேசியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. முஸ்லீம் பெண்களுக்கு பாதுகாப்பு என்று அவர் தவறாக வழிகாட்டப்பட்டதால் அப்படி பேட்டி அளித்திருக்கலாம். முஸ்லீம் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது மக்களை ஏமாற்றும் செயல். சிறுபான்மை மக்களை ஜனநாயகத்தை பாதிக்கும் விதத்தில் உள்ளதால் பொது சிவில் சட்டத்தை எதிர்க்கிறோம்.
இந்தியா பல்வேறு மதம் , மொழி, இனம் கொண்ட சமூகங்களை உள்ளடக்கிய தேசம். இதில் பல்வேறு மதங்களுக்கு பல்வேறு வகையான சட்டங்கள் உள்ளன. இந்து மதத்திற்கு மட்டும் 200 க்கும் மேற்பட்ட தனிச்சட்டங்கள் உண்டு.
அவர்களது பாரம்பரிய பண்பாட்டை பாதுகாக்கும் விதத்தில் இந்திய அரசும் அதை அங்கீகரிக்கிறது. இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு தனிச்சட்டம் உள்ளது. ஷரியத் சட்டம், அதை இந்த அரசமைப்பு ஏற்றுகொண்டுள்ளது. இதில் பெண்கள் உரிமை பாதிக்கும் செயல் எதுவும் இல்லை.
பெண்கள் உரிமை பாதிக்கப்படுகிறது என்பது தவறான கருத்து. முத்தலாக் எனபது உடனுக்குடன் அளிப்பதல்ல. முதல் முறை தலாக் சொன்ன பிறகு மூன்று மாதவிடாய் காலங்கள் அவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.
அதன் பின்னர் அதில் தீர்வு ஏற்படவில்லை என்றால் அடுத்த மூன்று மாதவிடாய் காலங்கள் என மும்முறை 9 மாதங்கள் வரை காலம் அளிக்கப்படுகிறது. இது பற்றிய தவறான தோற்றத்தை மதவாத சக்திகள் உருவாக்குகிறார்கள். இது முழுக்க முழுக்க உத்தரபிரதேச தேர்தலை ஆதாயமாக வைத்து பொது சிவில் சட்டத்தை கொண்டு வருகிறார்கள்.
அவ்வாறு எளிதாக பொது சிவில் சட்டத்தை இங்கு கொண்டு வந்துவிட முடியாது. இவர்கள் புரட்சியாளர் அம்பேத்கரை வேறு துணைக்கு அழைத்து கொள்கிறார்கள். அம்பேத்கர் எந்த காலத்திலும் இதை வலியுறுத்தியதில்லை. அனைத்து சமூகத்தினரும் ஒத்த கருத்து ஏற்ப்பட்டால் எடுத்து வரலாம் என்று சொன்னார்.
இதை வெங்கய நாயுடுவே ஒத்துகொண்டுள்ளார். ஆகவே அவ்வளவு எளிதில் பொது சிவில் சட்டத்தை இவர்கள் இங்கே அமல்படுத்த முடியாது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.