
சென்னை: கடந்த கால அதிமுக அரசு போல ஆளுநரின் அத்துமீறல்களுக்கு எல்லாம் இடமளிக்காமல், மாநில உரிமைகளைப் பாதுகாப்பதற்கு திமுக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
தலைமை செயலாளர் இறையன்பு அறிக்கையை தொடர்ந்து தமிழகத்தின் அரசு நிர்வாகத்தில் அதிகாரத்தில் ஆளுநர் தலையீடு என்பது போன்ற சர்ச்சைகள் எழுந்தன. இது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் கடுமையான கருத்துகளை முன் வைத்தன.
இந் நிலையில் மாநில அரசின் உரிமைகளில் ஆளுநர் தலையிடுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் அதற்கு திமுக இடம் அளிக்க கூடாது என்றும் விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:
தமிழக ஆளுநர் கேட்கும்போது துறைசார்ந்த விவரங்களை வழங்குவதற்கு அரசு செயலாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் செய்திருந்த அறிவிப்பு அரசியல் சர்ச்சையாக மாறியது. உடனே தலைமைச்செயலாளர் , 'இது வழக்கமான நடைமுறைதான்; ஆனால், தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விட்டது" என்று விளக்கம் அளித்தார்.
எனவே, ஆட்சிநிர்வாகத்தில் ஆளுநர் தலையீடு ஏதுமில்லை என்று கருதினோம். ஆனால், தற்போது பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் அரசுத்துறை செயலாளர்கள் ஆகியோரை ஆளுநர் எதிர்வரும் அக்-30ஆம் தேதி அழைத்துப் பேச இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதன்மூலம் ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவதாகவே தெரிகிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு எண் 167-இல், ஆளுநர் சில விவரங்களை மாநில அரசிடம் கேட்கலாம் என்ற அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் கேட்கும் விவரங்களை அளிக்க வேண்டிய பொறுப்பு அம்மாநிலத்தின் முதலமைச்சருக்குத்தான் உள்ளது. நேரடியாக அரசு செயலாளர்களை ஆளுநர் அழைத்துப் பேசுவது மாநில அரசின் செயல்பாடுகளில் தலையிடுவதாகவே பொருள்படும். இதற்கு அரசியலமைப்புச் சட்டம் எந்த அனுமதியும் வழங்கவில்லை.
இவருக்கு முன்பிருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாவட்டங்களில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் கண்டனத்தைத் தெரிவித்து கறுப்புக் கொடி போராட்டம் நடத்தப்பட்டது. அதன்பின்னரே அவர் அந்த நடைமுறையை நிறுத்திக்கொண்டார்.
புதிதாக வந்திருக்கும் ஆளுநர் ஆர். என்.ரவி அதே வழியைப் பின்பற்றுவது அரசியல் உள்நோக்கத்தோடு அவர் செயல்படுகிறாரோ என்ற ஐயத்தை எழுப்புகிறது. இந்த நடைமுறையை ஆளுநர் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை நியமனம் செய்வது தொடர்பாக முடிவெடுப்பதற்கு என வரையறுக்கப்பட்ட சில வழிமுறைகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றி அரசுடன் கலந்துபேசி அதில் அவர் முடிவெடுப்பது வழக்கமானது. மாறாக, நியமிக்கப்பட்ட துணைவேந்தர்களைச் சந்திப்பது ஏன்?
தேர்தெடுக்கப்பட்ட அரசு, முதல்வர் மற்றும் அமைச்சரவை ஆகியோரைத் தாண்டி ஆளுநரே நேரடியாக சந்திப்பது வழக்கத்திற்கும் சட்டத்திற்கும் மாறானது. முதல்வரோடும் தொடர்புடைய அமைச்சர்களோடும் நிர்வாகம் குறித்து கலந்தாய்வு செய்வதற்கு தேவையான விவரங்களைக் கேட்பதற்கு ஆளுநர் அதிகாரம் பெற்றவர்.
எனினும், நேரடியாக அதிகாரிகளைச் சந்திப்பது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குவதாக அமையும்.
கடந்த அதிமுக ஆட்சியின் போது பல்கலைக்கழகங்களில் ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்டவர்கள் திட்டமிட்டு உள்ளே நுழைக்கப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பாஜக ஆட்சியில் உயர் கல்வி நிலையங்கள் யாவும் சனாதனக் கருத்தியல் பிடிக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த நடைமுறையைப் புதிய ஆளுநரும் பின்பற்றினால் தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி வளாகங்களில் அமைதி கெடுவதோடு கல்வியும் பாழாகும். எனவே அத்தகைய போக்கை ஆளுநர் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
கடந்தகால அதிமுக அரசு போல ஆளுநரின் அத்துமீறல்களுக்கெல்லாம் இடமளிக்காமல், மாநில உரிமைகளைப் பாதுகாப்பதற்கு திமுக அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று நம்புகிறோம் என்று திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.