பிஞ்சு மனங்களில் மதவெறி நஞ்சு வந்துடும்... கி.வீரமணியை தொடர்ந்து அலறும் திமுக கூட்டணி கட்சி.!

By Asianet TamilFirst Published Oct 27, 2021, 8:43 PM IST
Highlights

மத்திய அரசின் வஞ்சகத் திட்டங்களை கைவிட்டு, தமிழ்நாட்டின் சமூகநீதி வழங்கல் முறையைப் பாதுகாத்து மேம்படுத்த வேண்டும்.

இல்லம் தேடி கல்வித் திட்டம் மூலம் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மேற்கொள்வார்கள் எனில் இங்கே ஷாகாக்கள் நடத்தும் சங்பரிவார் கும்பல் ஊடுருவி பிஞ்சு மனங்களில் மதவெறி நஞ்சு விதைக்கும் விபரீதம் ஏற்படும் என்பதை தமிழ் நாடு அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். 


இதுதொடர்பாக முத்தரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சமூக நீதி வழங்கலை உறுதி செய்யும் முறையில் தமிழ் நாட்டில் கருணாநிதி சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டார். இடையில் வந்த அதிமுக அரசு இதனைக் கிடப்பில் போட்டதும் தொடர்ந்து வந்த பாஜக அரசு, நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மாநில உரிமைகளை பறித்து சமஸ்கிருதமயமாக்கல் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே ஆரம்பப் பள்ளி மாணவர் சேர்க்கைக்கு ‘திறனறியும் தேர்வு’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்மூலம் ஒரு பகுதி மக்கள் கற்பதற்கான சக்தியற்றவர்கள் என ஒதுக்கி வைக்கும் வஞ்சகத் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள முயல்கிறது. இந்தத் திறனறியும் தேர்வுக்கு மதிப்பெண் ஏதும் தருவதில்லை என்பதால் மாணவர்களைப் பாதிக்காது என்று கூறும் விளக்கம் ஏற்கதக்கதல்ல. இந்நிலையில் ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்’ என்பது என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை அரசு ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும். இத்திட்டத்தை தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மேற்கொள்வார்கள் எனில் இங்கே ஷாகாக்கள் நடத்தும் சங்பரிவார் கும்பல் ஊடுருவி பிஞ்சு மனங்களில் மதவெறி நஞ்சு விதைக்கும் விபரீதம் ஏற்படும் என்பதை தமிழ் நாடு அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டின் தனித்துவத்தை அடிப்படையாகக் கொண்டு தனிக் கல்விக் கொள்கை உருவாக்க உயர் நிலை வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் உறுதியளித்த முதல்வர், மத்திய அரசின் வஞ்சகத் திட்டங்களை கைவிட்டு, தமிழ்நாட்டின் சமூகநீதி வழங்கல் முறையைப் பாதுகாத்து மேம்படுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு  மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது” என்று அறிக்கையில் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியும் இத்திட்டத்தை எதிர்த்து அறிக்கை வெளியிட்டிருந்தார். “இத்திட்டத்தைப் பயன்படுத்தி யாரும் நுழைந்து, பிஞ்சுகளுக்குப் பாடம் என்ற பெயரில், மத நஞ்சுகளைக்கூட விளைவிக்கவே இந்த சர்க்கரைப் பூச்சுள்ள விஷ (ஆர்.எஸ்.எஸ்.) உருண்டை என்றே கூறி முன்பே எதிர்த்தோம்.  அதற்குத் தமிழ்நாடு கல்வித் துறை தலையாட்டலாமா?” என்று காட்டமாக விமர்சித்திருந்தார். ஆனால், சத்துணவு திட்டம் போல, இல்லம் தேடி கல்வி திட்டமும், ஏழை மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

click me!