சந்தேகம் வேண்டாம்… மத்தியில் கூட்டாட்சி.. மாநிலத்தில் சுயாட்சி… பொட்டில் அடித்த முதல்வர் ஸ்டாலின்…!

By manimegalai aFirst Published Oct 27, 2021, 7:48 PM IST
Highlights

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற மகத்தான தத்துவத்தை  அடிப்படையாக கொண்ட இயக்கம் திமுக என்று பொட்டில் அடித்தாற்போல் பேசியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற மகத்தான தத்துவத்தை  அடிப்படையாக கொண்ட இயக்கம் திமுக என்று பொட்டில் அடித்தாற்போல் பேசியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

சில நாட்களுக்கு முன்பாக தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து துறை செயலாளர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். கவர்னருக்கு அரசின் நலத்திட்டங்கள் குறித்து முழு விவரங்களை அளிக்க அனைத்து துறைகளின் செயலாளர்களும் தயாராக இருக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

அந்த கடிதத்தின் ரியாக்ஷனை அவரே எதிர்பார்த்து இருக்க மாட்டார். அனுப்பிய சில மணி நேரங்களில் பெரும் விவாத பொருளாக மாறி போனது. கடிதம் அரசியல் பேச்சாக மாறி போக, ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுகிறார் என்ற விவாதம் எழுந்தது.

தமிழகத்தில் ஜனநாயக ரீதியாக மக்களால் பெரும்பான்மையான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் செயல்பாடுகளில் ஆளுநர் எப்படி தலையிடலாம் என்று கேள்விகள் எழுப்பப்பட்டன. மக்களின் ஆதரவுடன் திமுக ஆட்சி அமைத்திருக்கும் நிலையில் எதற்காக இப்படிப்பட்ட அறிக்கை தாக்கல் பற்றிய அறிவிப்பு என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சந்தேகத்தை எழுப்பின.

இந்த விஷயத்தில் திமுக மென்மையான போக்கை கடைபிடிக்க, காங்கிரசோ ஒரு பிடிபிடித்தது. அதன் தொடர்ச்சியாக 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக களத்தில் இருந்த போது, ஆளுநர் ஆய்வு என்றால் முதல் கட்சி சீறி அறிக்கை விட்ட திமுக, இப்போது ஆட்சி கட்டிலில் இருக்கும் போது அதனை ஆமோதிப்பது போன்று செயல்படுகிறது என்று குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

ஆளுநருடன் சமரச போக்கை கடைபிடிப்பதாகவும் பல்வேறு கருத்துகளும் எழுந்து பெரும் விமர்சனங்களுக்கு வழி வகுத்தது. தாம் அனுப்பிய அறிக்கையின் மைய பொருள் தடம் மாறி வேறு ஒரு திசையில் திரும்புகிறது என்பதை உணர்ந்த தலைமை செயலாளர் இறையன்பு உடனடியாக ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில் அலுவல் ரீதியாக துறை செயலாளர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம் அவசியமற்ற விவாத பொருளாக மாறி இருக்கிறது. தகவல்களை திரட்டி வைத்து கொள்வது என்பது நிர்வாகத்தில் வழக்கமானதே என்று என்று விளக்கம் அளித்து இருந்தார்.

ஆனால் அப்போதும் திமுகவின் மீதும், ஆட்சி நிர்வாகத்தின் மீதும் சந்தேக நிழல் மறைந்தது போன்று தெரியவில்லை. இப்போது அனைத்து சந்தேகங்கள், கேள்விகளுக்கு ஒரே ஒரு நிகழ்ச்சியில் பொட்டில் அடித்தாற் போல் பேசி முற்றுப்புள்ளி வைத்த இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் முதலியார்குப்பத்தில் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை அவர் தொடங்கி வைத்து உரையாற்றினார். அதில் தான் தமிழக அரசின் நிலைப்பாட்டை நச் என்று தெரிவித்து இருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

இது ஒரு கட்சியின் ஆட்சி அல்ல…இனத்தின் ஆட்சி என்று முன்னதாகவே சொல்லி இருக்கிறேன். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற மகத்தான தத்துவத்தை கொண்ட செயல்படும் கம்பீரமான இயக்கம் தான் நமது இயக்கம்.

மாநில சுயாட்சி, மதசார்பின்மை, மத நல்லிணக்கம், சமத்துவம் ஆகிய தத்துவங்களை அரசியலில் மட்டுமல்ல, அரசின் நிலைகளிலும் முன் எடுக்கக்கூடிய ஆட்சி தான் இந்த ஆட்சி. அந்த நெறிமுறைகளை வென்று எடுக்கக்கூடிய எந்நாளும் உழைக்கக்கூடிய ஆட்சி தான் இந்த ஆட்சி என்று கூறி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

ஆளுநருக்கு நலத்திட்டங்கள் பற்றி அறிக்கை, பம்மும் திமுக அரசு என்று எழுந்த ஒட்டு மொத்த விமர்சனங்கள், விவாதங்களுக்கு பொட்டில் அடித்தாற்போல் ஒரே பேச்சில் சம்மட்டியாய் பதில் அளித்துள்ளார் என்று திமுக முன்னணி நிர்வாகிகளும், அரசியல் விமர்சகர்களும் கூறி வருகின்றனர்.

இனி காங்கிரஸ் உள்ளிட்ட எந்த கட்சியும் திமுகவின் மீது சந்தேக பார்வை பார்க்கமுடியாது என்பதும் இதன் மூலம் தெளிவாக அறிய முடிகிறது என்றும் அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். ஆக மொத்தம் ஒரு பேச்சில் அனைத்து சர்ச்சைகளையும் ஆப் செய்திருக்கிறார் என்கின்றனர் கட்சியின் முன்னணியினர்….!

"

click me!