குறுங்குடி வெடிவிபத்தில் உயிரிழந்தோருக்காக கதறிய திருமாவளவன்: 25 லட்சம் இழப்பீடு, அரசு வேலை கேட்டு நெருக்கடி.

By Ezhilarasan BabuFirst Published Sep 4, 2020, 5:22 PM IST
Highlights

2 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்திருப்பது ஏமாற்றமளிக்கிறது, இழப்பீட்டு தொகையை 25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

குறுங்குடி வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 25 லட்சமும், அக்குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் விவரம்:-

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயிலுக்கு அருகில் உள்ள குருங்குடி என்னும் கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த வெடி விபத்திற்கு காரணமான அனைவர் மீதும் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். 

உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம், வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்திருப்பது ஏமாற்றமளிக்கிறது, இழப்பீட்டு தொகையை 25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு ஆலைகளில் ஏற்படுகிற வெடி விபத்தின் காரணமாக பலர் இப்படி உயிரிழப்பது வாடிக்கையாகி வருகிறது. இதை முறைப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

குறுங்குடியில் செயல்பட்டுவந்த பட்டாசு ஆலை உரிய அனுமதி பெற்று நடத்தப்பட்டதா, அதற்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக சரியான சோதனை செய்து சான்று  அளித்தார்களா என்ற கேள்வி எழுகிறது. இதுதொடர்பாக தமிழக அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம், தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படுகின்ற பட்டாசு ஆலைகளை கண்காணிக்க சிறப்பு குழு ஒன்றை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!