விதிமுறைகளை கடைபிடிக்காத 40 வணிக நிறுவனங்களுக்கு சீல்..!! நகராட்சி நிர்வாகம் அதிரடி...!!

By Ezhilarasan BabuFirst Published Sep 4, 2020, 4:44 PM IST
Highlights

இன்று ஒரு நாள் மட்டும் முகக்கவசம் அணியாத 600 தனிநபர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத வணிக நிறுவனங்களிடம் இருந்து 2,45,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்ற அரசு வெளியிட்டுள்ள பாதுகாப்பு நடைமுறைகளை  கடைப்பிடிக்காத தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் எச்சரித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆலோசனை மற்றும் உத்தரவின்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சராசரியாக  நாள்தோறும் 12 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாள்தோறும் 500 முதல் 600 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதுநாள் வரை 42,116 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, 22,50,741 நபர்கள் பயன் அடைந்துள்ளனர். 

இவர்களில் 1,25840 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் களப்பணியாளர்கள் மூலம் வீடுகள்தோறும் சென்று கொரோனா அறிகுறி உள்ள நபர்களும் கண்டறியப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அரசின் மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளின் காரணமாக வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர் விகிதம் அதிகமாகவும், இறப்பு விகிதம் மிகவும் குறைவாகவும் உள்ளது.

 தற்போது ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் பணி நிமித்தம் காரணமாக அதிக அளவில் வெளியே வருகின்றனர். எனவே பொதுமக்கள் வெளியே வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், பொது இடங்களில் குறைந்தது இரண்டு மீட்டர் இடைவெளி விட்டு சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், இது தொடர்பாக பொதுமக்களுக்கு களப்பணியாளர்கள் மூலமாகவும் தெருக்களில் ஆங்காங்கே விளம்பர தட்டிகள் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் முதியோர் இல்லங்கள் உள்ள இடங்களை கணக்கெடுத்து அங்கு அதிக கவனம் செலுத்தி கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாத வகையில் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

முககவசம் அணியாமல் வெளியே வரும் நபர்களிடம் அபராதம், சமூக இடைவெளி கடைப்பிடிக்காத வணிக நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு மூடி சீல் வைக்கப்படும். அதேபோன்று அரசு மற்றும் தனியார் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில், தொழிலாளர்கள் முகக் கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட வார்டு உதவி பொறியாளர் உறுதி செய்ய வேண்டும், மேலும் மாநகராட்சியின் பொறியாளர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் இதர பணியாளர்கள் அனைத்துப் பெரு சிறு வணிக நிறுவனங்களில் முகக் கவசனங்கள் அணிதல் மற்றும் சமூக இடைவெளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க தனிநபர் மற்றும் வணிக நிறுவனங்களிடம் இருந்து 3-9-2020 வரை 1,85,66,117 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரு நாள் மட்டும் முகக்கவசம் அணியாத 600 தனிநபர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத வணிக நிறுவனங்களிடம் இருந்து 2,45,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் 40 வணிக நிறுவனங்கள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க தவறும் தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளது.
 

click me!