திராவிட கொள்கைக்கு எதிரானவர் ஆர்.என்.ரவி..! சட்டப்பேரவையில் உரையாற்ற தகுதியில்லை- திருமாவளவன் ஆவேசம்

By Ajmal KhanFirst Published Jan 8, 2023, 10:18 AM IST
Highlights

ஆளுநர் ஆர்என் ரவி திராவிட கொள்கைக்கு எதிராக இருப்பதால், தமிழக சட்டப்பேரவையில் உரையாற்ற தகுதியற்றவர் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 
 

காசி தமிழ்சங்கத்திற்கு ஏற்பாடு செய்த நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா  சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு என்ற பெயருக்கு பதில் தமிழகம் என்பதே சரியாக இருக்கும் என்றும், ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன என்பதால் பாரதத்தின் பகுதி தமிழகம் என்பதுதான் சரி என கூறியிருந்தார். இதற்க்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஆளுநரின் கருத்திற்கு கண்டனம் தெரிவித்தார். 

தமிழக ஆளுநர் தொடர்ந்து குதர்க்கமான கருத்துக்களை பேசி வருகிறார். தமிழகம் என்றாலும் தமிழ்நாடு என்றாலும் ஒன்றுதான் வேண்டுமென்றே பெரியார்,அண்ணா முன்னெடுத்த அரசியலை பழிக்க வேண்டும் என்று அதற்கு எதிரான ஒரு கருத்தை, தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்று ஆளுநர் விரும்புவதாக குற்றம்சாட்டினார். ஆளுநர் ஆர் எஸ் எஸ் தொண்டரைப் போன்று செயல்பட்டு வருகிறார். அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆர்எஸ்எஸ் பணிகளை மேற்கொள்ளலாம் என்ற தெரிவித்த திருமாவளவன், ஆளுநரின் செயல்பாடு அரசியல் அமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயலாக இருப்பதாக கூறினார்.

திமுக அரசின் கொள்கைக்கு எதிரானவர், திராவிட கோட்பாட்டிற்கு எதிரானவர் தமிழகத்தில் ஆளுநராக நீடிப்பதற்கு தகுதி இல்லை. இவர் சட்டப்பேரவையில் நாளை ஆளுநர் உரை படிப்பது எந்த வகையில் பொருத்தம் என கேள்வி எழுப்பினார்.  திராவிட மாடல் அரசின் கொள்கையை முன்னிறுத்தக்கூடிய உரையை ஆற்றுவதற்கு ஆளுநர் ஆர்என் ரவிக்கு எந்த வகையிலும் தகுதி படைத்தவர் அல்ல என தெரிவித்தார்.  புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் மனித மலத்தை கலந்த அநாகரீகத்தை செய்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  இதில் நேரடியாக தலையிட வேண்டும். அவர்களை கைது செய்யக்கோரி வருகிற ஜனவரி 11ஆம் தேதி விடுதலை கருத்தை கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

கேட்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.. பாராட்டிய கையோடு விவசாயிகளுக்காக அரசுக்கு கோரிக்கை வைத்த ராமதாஸ்.!
 

click me!