வாழ்வில் இன்றும் வலுவாக இயங்கிக் கொண்டிருக்கிற ஒரு நிகழ்காலப் பேருண்மையைக் "கடந்தகால விவகாரங்கள்" எனவும் அவற்றை மறக்கும்படியும் திரு. மோகன் பகவத் அவர்கள் கூறுகிறார். முழுபூசணியைச் சோற்றில் மூடி மறைக்கும் உலகமகா கில்லாடியாக இருக்கிறார் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் தலைவருக்கு திருமா பதில்
சாதி, வர்ணம் தொடர்பாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறிய கருத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ராஷ்ட்ரிய ஸ்வயசேவக் சங் அமைப்பின் தலைவர் திரு.மோகன் பகவத் அவர்கள், " சாதி, வர்ணம் என்பவையெல்லாம் இறந்தகால விவகாரங்கள் என்றும்; அவற்றை மறந்துவிட்டு கடந்து செல்வோமென்றும் " அண்மையில் கூறியிருக்கிறார். அவர் கூறுவது மிகப்பெரிய நகைப்புக்குரிய கேலிக்கூத்தாக உள்ளது. இதைவிட ஒரு நாடக அரசியல் வேறேதுமில்லை என்பதாக உள்ளது. இந்திய சமூகம் அல்லது இந்து சமூகம், சாதி, வர்ணம் ஆகிய இரண்டையும் தவிர்த்துவிட்டு இயங்கவே முடியாது. அந்த அளவுக்கு அவையிரண்டும் இந்தச் சமூகத்தின் அடி முதல் நுனி வரையில் விரவிப் பரவி அதன் உயிரியக்கமாகவே விளங்குகின்றன.
ஆனால், நடைமுறை வாழ்வில் இன்றும் வலுவாக இயங்கிக் கொண்டிருக்கிற ஒரு நிகழ்காலப் பேருண்மையைக் "கடந்தகால விவகாரங்கள்" எனவும் அவற்றை மறக்கும்படியும் திரு. மோகன் பகவத் அவர்கள் கூறுகிறார். முழுபூசணியைச் சோற்றில் மூடி மறைக்கும் உலகமகா கில்லாடியாக இருக்கிறார். நம்மைப் போன்றவர்கள் ஏதோ இல்லாத ஒன்றை இட்டுக்கட்டிப் பேசுவதைப் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க முனைகிறார். வர்ணாஸ்ரமம் இச்சமூகத்தின் ஆணிவேராகவும் சாதிகள் அதன் பக்கவேர்களாகவும் குலம்- கோத்ரம் போன்றவை அவற்றின் சல்லிவேர்களாகவும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. பிறப்பின் அடிப்படையிலான உயர்வு- தாழ்வு என்னும் பாகுபாடும் அதனடிப்படையிலான வாழ்க்கைமுறையும்தான் இந்துச் சமூகத்தின் உயிர்நாடியாகவே அமைந்துள்ளது.
ஆண்- பெண் என்னும் இயல்பான வேறுபாட்டில் சரிபாதி மேலிருந்து கீழாக பாலின பாகுபாடு என்பது இங்கே நிலைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, ஆண் பெண்ணைவிடவும் பிறப்பினாலேயே உயர்வான தகுதியுடையவன் என்னும் பாகுபாடு கும்பம், சமூகம் உள்ளிட்ட வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் நியாயப்படுத்தப்பட்டு நிலைப்படுத்தப்பட்டுள்ளது. பாலின பாகுபாடு மேலிருந்து கீழாக (vertically) நிலை கொண்டுள்ளதென்றால், வர்ணாஸ்ரம பாகுபாடு பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் அடுக்குகள் இச்சமூகத்தின் இடம்-வலமாகவும் (horizontally); அதேவேளையில், மேல்- கீழாகவும் நிறுவப்பட்டுள்ளது. இது பல ஆயிரம் தலைமுறைகளாக்க் கெட்டித் தட்டி இறுகிக் கிடக்கிறது. இதுவே, இச்சமூகத்தின் உழைப்பையும் உற்பத்தி முறையையும் அதிகாரம் மற்றும் உரிமைகள் ஆகியவற்றையும் தீர்மானிக்கிற குலத்தொழிலாக வரையறுக்கிறது.
இதனால், ஒரு குறிப்பிட்ட வர்ணத்தைச் சார்ந்த சாதிகள்தான் நிலையான பாதுகாப்பையும் பெரும்பயன்களையும் பெற்று அரசியல், சமூகம், கலை, இலக்கியம் கலாச்சாரம் உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும் தொடர்ந்து இன்றும் மேலாதிக்கத்தைச் செய்துவருகின்றன.அத்தகைய பெருவாய்ப்பைத் தலைமுறை தலைமுறையாய் பிறப்பின் அடிப்படையில் பெற்றிருப்பவர் தான் திரு.மோகன் பகவத் அவர்கள். அவரோ, அவரது குலத்தவரோ சாதியின் பெயரால், வர்ணத்தின் பெயரால் இழிவுகளையும் வன்கொடுமைகளையும் வறுமையின் வதைகளையும் சந்தித்திருந்தால் அவரால் இப்படி யாவற்றையும் மறந்துவிட்டு இந்துவாக அணிதிரளுவோம் வாருங்கள் என்று கூறுவாரா? ஒரே ஒருநாள் சேரியிலோ, குப்பத்திலோ அவரால் வாழ்ந்து காட்ட முடியுமா? ஒரே ஒருநாள் ஏர்பிடிக்கும் விவசாயக் கூலியாகவோ, செருப்புத் தைக்கும் தொழிலாளியாகவோ வாழும் அளவுக்கு அவரால் தாக்குப்பிடிக்க முடியுமா?
சிவசேனா கட்சி சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம்.. வில் அம்பு யாருக்கு கிடைக்குமோ ?
அவ்வாறு வாழும்நிலை அவருக்கு ஏற்பட்டிருந்தால் இப்படி போகிற போக்கில் ' சாதி- வர்ணம் யாவற்றையும் மறந்துவிடுங்கள் ' என அவரால் உளறமுடியுமா? வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து, குளிரில் நடுங்கி் உடலை வருத்தி வேர்வை - குருதி சிந்தி உழைப்பதோடு; விலங்குகளை விடவும் இழிவான முறையில் நடத்தப்படும் அளவுக்கு மிகவும் குரூரமான வன்கொடுமைகளையெல்லாம் சந்திக்கக் கூடியவராக இருந்தால் இப்படி அவரால் பிதற்றமுடியுமா? அவருக்கு நேர்மைத் திறமிருந்தால் சனாதனத்தின் கொடூரத்தையும் அதனால் ஆயிரம் தலைமுறைகளாகப் பாதிக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான எளியமக்களின் வலிமிகுந்த உணர்வுகளையும் ஏற்றுக்கொண்டு, அத்தகு சனாதனத்தை வேரறுக்க முன்வர வேண்டாமா? அதன்மூலமே மதமாற்றங்களையெல்லாம் தடுத்து இந்து மதத்தைக் காப்பாற்ற முடியும் என்பதை உணரவேண்டாமா? சுய பகுப்பாய்வு மற்றும் சுய விமர்சனம் செய்துகொள்ளும் துணிச்சலைப் பெற வேண்டாமா? சாதியை ஒழித்து சமத்துவம் படைக்க உறுதியேற்று முற்போக்கான திசைவழியில் பயணிக்க வேண்டுமென்கிற தெளிவைப் பெற வேண்டாமா?
மனிதகுலத்துக்கு எதிரான கோல்வாக்கரின் கொடுநஞ்சுக் கொள்கைகளை உதறிவிட்டு மாமனிதர் புரட்சியாளர் அம்பேத்கரின் சமத்துவக் கொள்கைகளை உள்வாங்க வேண்டாமா?திரு.மோகன் பகவத் அவர்களே, தாங்கள் கூறுவதைப்போல சாதியும் வர்ணமும் மறந்துவிடக்கூடியவை அல்ல. வேரோடு கெல்லிஎறிந்து முற்றாக அழித்தொழிக்கப்பட வேண்டியவை. இதனை உணர்ந்து ஒப்புக்கொண்டு சாதியை- வர்ணத்தைச் சிதைப்பதற்கு; எச்ச சொச்சமும் இல்லாத அளவுக்குத் துடைத்தெறிய; அதற்கென போராட முன் வாருங்கள் என திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படியுங்கள்
கொடநாடு கொலை வழக்கு..! இபிஎஸ் ஆதரவாளரை கைது செய்ய திட்டம்..? சூடு பிடிக்கும் சிபிசிஐடி விசாரணை