தேர்தல் ஆணையம் பாஜக கட்டுபாட்டில் உள்ள நிலையில் திமுக ஈரோடு இடைத்தேர்தலில் விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கட்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஈவிகேஎஸ் வெற்றி உறுதி
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வருகிற 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பாக தென்னரசு போட்டியிடுகிறார். இரண்டு பேருக்கும் இடையே போட்டியானது தீவிரம் அடைந்துள்ளது. இந்தநிலையில் இரு தரப்புக்கும் ஆதரவாக பிரச்சராம் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட சத்யா நகர், கிருஷ்ணம்பாளையம், மரப்பாலம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கட்டும்
அப்போது திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு பேசினார். மேலும் மத்திய நிதிநிலை அறிக்கையில் சிறுபான்மையினருக்கு பறிக்கப்பட்ட சலுகைகள், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கான நிதி குறைக்கப்பட்டதையும் விமர்சித்து பேசினார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், ஈரோடு தேர்தலில் திமுக முறைகேடு செய்வதாக எழுந்துள்ள புகாருக்கு பதில் அளித்த அவர், ஈரோடு இடைத்தேர்தலில் திமுக தேர்தல் முறைகேடு ஈடுபடுவதாக எதிர்கட்சிகளால் பரப்பப்படுகிறது. தேர்தல் ஆணையம் பாஜக கட்டுபாட்டில் உள்ள நிலையில் திமுக தேர்தல் விதிமுறைகள் மீறினால் அவர்கள் நடவடிக்கை எடுக்கட்டும் என திருமாவளவன் தெரிவித்தார்.
கால பொருத்தமும் இல்லை
பிபிசி நிறுவனம் மீது அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்தரப்பினரை பழி வாங்குவதாக விமர்சித்தார். பிரதமர் மோடி ஆட்சி கொடுங்கோன்மையின் உச்சத்தில் உள்ளது என்பதற்கு சான்றாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற அறிவிப்பில் கால பொருத்தமும் இல்லை, அரசியல் பொருத்தமும் இல்லையென தெரிவித்தவர், பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதை தற்போது அறிவிப்பதற்கு என்ன காரணம் என கேள்வி எழுப்பினார். இலங்கையில் உள்ள சிங்கள அரசை அச்சுறுத்த மத்திய பாஜக அரசு தலையீடுவதாக தெரிவதாக குற்றம்சாட்டினார்.
இதையும் படியுங்கள்
ஈரோடு இடைத்தேர்தல் பரபரப்பு புகார்..! திமுகவின் 10 பணிமனைகளுக்கு சீல் வைத்த தேர்தல் ஆணையம்