லண்டனில் இது தான் நடந்துச்சு !! ஆனா உல்டாவா செய்தி வெளியாகியிருக்கு ! திருமா விளக்கம் !!

By Selvanayagam PFirst Published Aug 28, 2019, 8:33 PM IST
Highlights

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் லண்டனில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்ததற்காக எதிர்ப்பு தெரிவித்து சிலர் கண்டன குரல் எழுப்பியதாக கூறப்படும் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையாகி  வரும் நிலையில் அது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

லண்டனில் உலக தமிழர்களின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். அதில் அவர் எழுதிய  அமைப்பாய் திரள்வோம் என்ற நூலை வெளியிட்டார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஜோசப் மெக்கேலா என்பவர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அக்கூட்டத்தில் நூறு தமிழர்களுக்கு மேல் பங்கேற்றுள்ளனர்.

அப்போது  பேசிய திருமாவளவன்,  2009 நாடாளுமன்ற தேர்தலின் போது விடுதலைப் புலிகளின் நிர்வாகி சேரலாதன் தம்மை தொலைபேசியில் அழைத்து காங்கிரசை எதிர்த்து ஏன் அரசியல் நடத்துகிறீர்கள் என்றும் நீங்கள் பேசபேச தமிழர்களின் மீதுதான் அதிக அளவில் குண்டு விழுகிறது என கூறியதாக தெரிவித்தார். 

அதன் பின்னர் அதே தொலைபேசியில் பேசிய  அரசியல் பிரிவு தலைவர் நடேசன் , தலைவர் பிரபாகரன் என்னிடம் சொல்லச் சொன்னதாக ஒரு செய்தியை என்னிடம் தெரிவித்தார். ‘நீங்கள் காங்கிரஸை எதிர்க்க வேண்டாம். உடனடியாக காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தியுங்கள்’எனத் தலைவர் கூறியதாகவும், இதையடுத்தே தாம் அறிவாலயம் சென்று காங்கிரஸ் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்ததாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.

திருமாவளவனின் இந்த பேச்சைக் கேட்டதும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது அவர் அருகில் இருந்த இருவர் உடனடியாக எழுந்து திருமாவளவனுக்கு எதிராக கோஷங்களையும், அவதூறான வார்த்தைகளையும் பிரயோகப்படுத்தினர். மேலும், நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட வரவேற்பு துண்டு காகிதங்களையும் தூக்கி வீசினர்.

ஆனால், இக்கூட்டத்தில் பேசிய திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நிதி கேட்டதாகவும் அதனால் ஆத்திரமடைந்த ஈழத் தமிழர்கள், தமிழர்களைக் கொன்ற காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து விட்டு, ஈழத் தமிழர்களிடமே நிதி கேட்கிறாயா என கோஷங்கள் எழுப்பியதாகவும், பணத்தை எடுத்து திருமாவளவன் மீது வீசியதாகவும் குறிப்பிட்டு இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். இது தவறான தகவல் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

click me!