
கடந்த சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் 83 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் தோல்வியடைந்தார். வெற்றி பெற்ற அ.தி.மு.க வேட்பாளர் முருகுமாறன் வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரிய அவர் தொடர்ந்த வழக்கில், தொகுதி தேர்தல் அதிகாரிக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்பியது உயர்நீதிமன்றம்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் முருகுமாறன் 83 வாக்குகள் வித்தியாசத்தில் எதிர்த்து போட்டியிட்ட வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவனை தோற்கடித்தார்.
இந்த வெற்றியை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்ட அக்கட்சி தலைவர் திருமாவளவன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். அதில் வாக்கு எண்ணிக்கயில் முறைகேடு நடந்துள்ளது, தபால் வாக்குகள் எண்ணப்படவில்லை என்றும், அரசு அதிகாரிகள் அதிமுக.வுக்கு உடந்தையாக செயல்பட்டனர், அதிமுக.வினர் பணம் பட்டுவாடா செய்தனர் எனவே இந்த வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும், மேலும் அந்த தொகுதிக்கு மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடவேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
அந்த வழக்கின் மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு மீண்டும் இன்று நீதிபதி துரைசாமி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது தங்களுக்கு கிடைக்கவில்லை என்று எதிர்தரப்பினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி, காட்டுமன்னார்கோயில்தொகுதி தேர்தல் அதிகாரிக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் வழக்கின்
விசாரணையை நவம்பர் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்