அதிமுக கூட்டணியில் பாமக கேட்கும் 23 தொகுதிகள் இதுதான்... கேட்ட தொகுதிகளை ஒதுக்குமா அதிமுக..?

By Asianet TamilFirst Published Mar 3, 2021, 9:20 AM IST
Highlights

அதிமுக கூட்டணி  இன்னும் இறுதியாகாத நிலையில், தாங்கள் போட்டியிட விரும்பும் 23 தொகுதிகளின் பட்டியலை அதிமுகவிடம் பாமக வழங்கியுள்ளது.
 

அதிமுக கூட்டணியில் முதல் கட்சியாக பாமகவுடன் தொகுதி பங்கீடு நிறைவுற்றது. வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கியதால் அதிமுக-பாமக இடையேயான கூட்டணி சிக்கலின்றி முடிந்தது. அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டன. இட ஒதுக்கீடு கோரிக்கை ஏற்கப்பட்டதால், கூட்டணியில் முதன் முறையாக குறைந்த எண்ணிக்கையில் போட்டியிட பாமகவும் ஒத்துக்கொண்டதாக அன்புமணி ராமதாஸ்  தெரிவித்தார். இந்நிலையில் தொகுதிகளை குறைவாகப் பெற்றுக்கொண்டதால், தாங்கள் விரும்பும் தொகுதிகளைத் தர வேண்டும் என்று அதிமுகவிடம் பாமக கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக தங்கள் நிர்வாகிகளுடன் ஆலோசித்த பாமக தலைமை, 23 தொகுதிகளில் எந்தெந்த தொகுதிகளை வழங்க வேண்டும் என்ற உத்தேச பட்டியலையும் அதிமுகவிடம் வழங்கியுள்ளது. அதன்படி திருத்தணி, வேளச்சேரி, திருப்போரூர், கும்மிடிப்பூண்டி, சங்கராபுரம், செங்கல்பட்டு, விக்கிரவாண்டி, ஆரணி, பென்னாகரம், வீரபாண்டி, காட்டுமன்னார்கோவில், அணைக்கட்டு, ஓசூர், கலசப்பாக்கம், நெய்வேலி, சோளிங்கர், பாப்பிரெட்டிப்பட்டி, குன்னம், திண்டிவனம், பண்ருட்டி, மேட்டூர், ஜெயங்கொண்டம், ஆற்காடு ஆகிய 23 தொகுதிகளை பாமக கேட்டுள்ளது.


இதில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக போட்டியிட்டு வென்ற தொகுதிகளும் பாமக கேட்டுள்ளது. இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற விக்கிரவாண்டி, கும்மிடிப்பூண்டி, வீரபாண்டி, காட்டுமன்னார்கோவில், கலப்பாக்கம், திருத்தணி உள்ளிட்ட 10-க்கு மேற்பட்ட தொகுதிகளை பாமக கோரியதால், அதிமுக அதிர்ச்சியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி இறுதி செய்யப்படாத நிலையில், பாமக 23 தொகுதிகளை அடையாளம் கண்டு கேட்பதை அதிமுக ரசிக்கவில்லை. தொகுதி பங்கீடு முழுமையாக முடிந்த பின்னர், மற்ற கட்சிகளும் கேட்கும் தொகுதிகளைப் பொறுத்து பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று அதிமுக தரப்பில் கூறப்படுகிறது.
 

click me!