புதுச்சேரியில் நம்ப வைத்து கழுத்தை அறுத்ததா பாஜக..? கூட்டணியிலிருந்து உருவிக்கொண்டு ஓட ரங்கசாமி திட்டம்.!

By Asianet TamilFirst Published Mar 3, 2021, 8:55 AM IST
Highlights

புதுச்சேரியில் பாஜக-அதிமுக கூட்டணியிலிருந்து என்.ஆர். காங்கிரஸ் விலகும் முடிவை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

புதுச்சேரியில் 2016-ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்றுவந்த நாராயணசாமி அரசு கவிழ்ந்தது. இந்த அரசு கவிழும் பின்னணியில் பாஜக இருந்தது. மேலும் அதிமுக-என்ஆர் காங்கிரஸ் ஒத்துழைப்பால் நாராயணசாமி அரசை கவிழ்க்க முடிந்தது. ஏப்ரல் 6-இல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக-என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக ஆகிய கட்சிகள் சேர்ந்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டுவருகிறது. திமுக - காங்கிரஸ் இன்னொரு கூட்டணியாக தேர்தலை சந்திக்கும் என்ற நிலை உள்ளது.
அண்மையில் வெளியான கருத்துக்கணிப்பில் புதுச்சேரியில் அதிமுக-என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக அடங்கிய கூட்டணி வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியில் பெரிய கட்சியாக ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் உள்ளது. எனவே, இந்தத் தேர்தலில் வெற்றி பெறும்பட்சத்தில் ரங்கசாமி முதல்வர் ஆவார் என்றே அக்கட்சி கூறிவருகிறது. ஆனால், அண்மையில் காரைக்காலில் பிரசாரம் மேற்கொண்ட பாஜக முன்னாள் தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா, ‘பாண்டிச்சேரியில் பாஜக ஆட்சி அமைக்கும்’ என்று தெரிவித்தார்.


இதேபோல் புதுச்சேரி பாஜகவினரும், புதுச்சேரியில் பாஜக ஆட்சி என்றே பேசிவருகிறார்கள். தமிழர்கள் பாஜகவை வெறுக்கிறார்கள் என்ற பிரசாரத்தை முறியடிக்கும்வகையில், இந்த முறை புதுச்சேரியிலாலவது பாஜக ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தலைமை உள்ளது. அதன் காரணமாகவே  காங்கிரஸ் கட்சியிலிருந்த முக்கிய தலைவர்களை பாஜக தட்டி தூக்கியது. பாஜகவில் இணைந்த நமச்சிவாயம் பாஜக சார்பில் முதல்வர் பதவிக்கு முன்னிறுத்தப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், தேர்தலில் தன்னை முதல்வர் வேட்பாளாராக பாஜக முன்னிறுத்தும் என்று எதிர்பார்த்த என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஏமாற்றத்துக்கு உள்ளாகியிருக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. தன்னை நம்ப வைத்து பாஜக கழுத்து அறுத்துவிட்டதாகவும் ரங்கசாமி கோபத்தில் இருப்பதாக தெரிகிறது. தன்னை முதல்வர் வேட்பாளராக ஏற்கவில்லையென்றால் கூட்டணியிலிருந்து விலக ரங்கசாமி முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக கட்சியினருடன் ரங்கசாமி ஆலோசித்துவருவதாக என்.ஆர். காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான அறிவிப்பு ஓரிறு நாட்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 

click me!