
சசிகலாவின் கணவர் நடராசனுக்கு உறுப்பு மாற்று வழங்கியது தொடர்பாக எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என்று அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் கூறினார்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட கணவர் நடராஜனை பார்ப்பதற்காக பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா இன்று பரோலில் வருகிறார். சென்னை வரும்
சசிகலா, இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டில் தங்க உள்ளதாக தெரிகிறது.
சிறைத்துறையின் பல்வேறு நிபந்தனைகளின் பேரிலேயே சசிகலா பரோலில் வெளிவருகிறார். பரோலில் வரும் சசிகலாவை அமைச்சர்கள் சந்திக்க மாட்டார்கள் என்று மீன்வளத்துறை அமைச்சர் இன்று கூறியிருந்தார்.
சசிகலா வெளியே வருவதால் அரசியலில் எந்தவித மாற்றமும் நிகழாது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். சென்னை, சோழிங்கநல்லூரில் செய்தியாளர்களிடையே பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், நடராசனுக்கு வழங்கப்பட்ட சிறுநீரகம், கல்லீரல் உறுப்பு அளிக்கப்பட்டதில் எந்த வித முறைகேடும் இல்லை என்று கூறினார். சட்டம் கடுமையாக உள்ளது என்றும் உறுப்பு வழங்குவதில் எந்தவித முறைகேடும் நடைபெறுவதற்கான வாய்ப்பும் இல்லை என்று மாஃபா பாண்டியராஜன் கூறினார்.