தமிழகத்தில் ஒரு நொடிக்கூட மின் வெட்டு இருக்காது... செந்தில் பாலாஜி அளித்த அதிரடி உறுதிமொழி..!

By Asianet TamilFirst Published Oct 10, 2021, 9:19 PM IST
Highlights

 நாடு முழுவதும் நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் ஒரு நொடிக்கூட மின்வெட்டு இருக்காது என்று தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
 

நாடு முழுவதும் நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத்தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் அனல் மின்சார உற்பத்தி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல்லிக்கு தேவையான நிலக்கரியை வழங்குங்கள் என்று அம்மாநில முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதேபோல தமிழகத்திலும் மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரியின் இருப்பு 4 நாட்களுக்கு மட்டுமே இருப்பதாகத் தகவல்கள் வெளியாயின. இதனால், தமிழகத்தில் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுமோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளான அதிமுக, மநீம ஆகிய கட்சிகள் ஆளுங்கட்சியை விமர்சிக்கத் தொடங்கியிருக்கின்றன. மீண்டும் ஒரு மின்வெட்டு காலத்தை தமிழகம் தாங்காது என்று திமுக அரசை கிண்டலடித்து மநீம கமல்ஹாசன் விமர்சித்திருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் ஒரு நொடிக்கூட மின்வெட்டு ஏற்படாது என்று தமிழக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “தமிழகத்தில் ஒரு நொடிக்கூட மின்வெட்டு ஏற்படாது. தமிழகத்துக்குத் தேவையான அளவு நிலக்கரி வந்துக்கொண்டிருக்கிறது. தற்போதைய சூழலில் கையிருப்பில் உள்ள நிலக்கரியைப் பிரித்து தேவைப்படும் மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பி வருகிறது. எந்தச் சூழ்நிலையிலும் விவசாயத்துக்கான இலவச மின்சாரம் நிறுத்தப்படாது” என்று செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

click me!